அரசாங்க அலுவலருக்கு நேர்ந்த கதி

Report Print Rusath in சமூகம்

கொழும்பு - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில், மாவடிவேம்பு பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் அரசாங்க அலுவலரொருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் கிரான் பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட உத்தியோகத்தராக கடமையாற்றும் கறுவல்தம்பி வரதராஜன் (வயது 56) என்பவரே பலியாகியுள்ளார். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கல்முனை நோக்கி கோதுமை மாவை ஏற்றி சென்று கொண்டிருந்த லொறியும், வந்தாறுமூலையிருந்து சித்தாண்டி நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வரதராஜன் படுகாயமடைந்த நிலையில் அருகிலிருந்த மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

ஸ்தலத்திற்கு விரைந்த ஏறாவூர் போக்குவரத்துப் பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டு லொறிச் சாரதியைக் கைது செய்துள்ளதோடு, லொறியையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.