கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை இவ்வருடத்திற்குள் பூர்த்தி

Report Print Kumar in சமூகம்

கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் பிரச்சினை இந்த ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்படும் என கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உள்ளுராட்சிமன்ற சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற விசேட வழிபாடுகளை தொடர்ந்து உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அதனைத்தொடர்ந்து சத்திப்பிரமாணம் செய்யும் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித பொகொல்லாகம பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட 36 உறுப்பினர்கள் ஆளுனர் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதி தலைவர் க.யோகவேள்,கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர்,மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளர் க.சித்திரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கட்டவுட்டுக்கு முன்பாக சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வில் ஆளுனர் ஓருவர் கலந்து கொள்வதை முக்கியமான விடயமாகவே நான் பார்க்கின்றேன்.

ஒரு ஜனநாயக ரீதியான இவ்வாறான கட்டமைப்புகள் மக்களின் வாக்குகளைக் கொண்டே கட்டியெழுப்பப்படுகின்றன. இந்த ஜனநாயக கட்டமைப்புகள் பிரித்தானிய காலம் தொடக்கம் சுமார் 150 வருடமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இம்முறை தேர்தலில் பெண்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது முக்கியமான ஒரு நடவடிக்கையாக கொள்ளமுடியும். முதல் பெண் பிரதமரை தெரிவுசெய்த பெருமைக்குரிய நாடாகவும் இலங்கையே உள்ளது.

அந்தவகையில் இம்முறை விசேட சட்டம் ஒன்றை கொண்டுவந்து அதிகளவான பெண்கள் இந்த உள்ளுராட்சி சபைகளில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி பெண்களை உள்வாங்குவதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதிகளவான பெண்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்படும்போது எந்தவித பாரபட்சமும் இல்லாமல் நேர்மையான முறையில் முன்னெடுக்கப்படவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் அர்ப்பணிப்புமிக்க சேவையினை மக்களுக்கு ஆற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை கிழக்கு மாகாண ஆளுனர் என்ற வகையில் முன்வைக்கின்றேன்.

கடந்த காலத்தில் எங்களுக்குள் பயங்கரவாதம், இனவாதம், மதவாதம், பிரதேசவாதங்கள் இருந்தன.அவற்றினை நாங்கள் ஒதுக்கி வைத்துவிட்டு கிழக்கு மாகாணத்தின் சுபீட்சத்திற்காக ஒன்றுபட்டுசெயற்பட வேண்டும்.

இலங்கையின் ஜனநாயக நிலைமைகள் மற்றும் அதன் முன்னெடுப்புகள் தொடர்பிலும் உலகநாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு அதன் ஊடாக முன்வைக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தி வருகின்றோம்.

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் 120க்கும்மேற்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவருகின்றோம்.

நாங்கள் கடந்த காலத்தில் நடாத்திய பேச்சுவார்த்தைகள் மற்றும் செயற்பாடுகளில் இருந்துபெற்றுக்கொண்ட பாடங்களை அடிப்படையாக கொண்டு இனங்களிடையே நல்லுறவினை ஏற்படுத்தி இனங்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தீர்த்து பாரபட்சம் இல்லாத நிலையினை ஏற்படுத்த வேண்டும் என்ற ரீதியில் எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உலகத்தின் எல்லைக்கே எங்களை கொண்டுசெல்லும் சாதனமாக கல்வித்துறையிருக்கின்றது. கடந்த கால அசாதாரண சூழ்நிலையினால் கல்வியை முழுமையாக பெற்றுக்கொள்ளமுடியாத நிலையிருந்தது.

கிழக்கு மாகாணத்தினை நான் பொறுப்பேற்ற நிலையில் கல்வித்துறையானது இலங்கையில் மிகவும் பின்தங்கிய மாகாணமாக கிழக்கு மாகாணம் இருந்தது.இலங்கையில் மிகவும் கீழ் நிலையான ஒன்பதாவது இடத்திலேயே இருந்தது.

கிழக:கு மாகாண கல்வித்துறையினை மேம்படுத்தவேண்டிய மிகமுக்கியமான கடமை இன்று எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலையினை கருத்தில் கொண்டு முன்னாள் முதலமைச்சா சந்திரகாந்தன் 80மில்லியன் ரூபா செலவில் பொதுநூலகம் ஒன்றை மட்டக்களப்பு மாநகரசபையில் அமைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்தார்.

அந்த பொதுநூலகத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த பொதுநூலகத்தினை 200மில்லியன் ரூபா செலவில் அமைத்து இந்த ஆண்டு முடிவதற்குள் பொதுமக்களின் பாவனைக்கு வழங்குவதற்கான நடவடிக்கையினை நான் மேற்கொண்டுள்ளேன்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் வளங்களையும் அதிகரித்து மாணவர்களை சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளவைப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் தொடர்க்கம் பெப்ரவரி வரையான காலப்பகுதியில் 2000 பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்தோம்.மே மாதம் அளவில் 790 பட்டதாரிகளை ஆசிரயர் சேவைக்குள் உள்ளிர்ப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் 2018ஆம்ஆண்டுக்குள் அவர்களுக்கான நியமனங்களை வழங்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தற்போது மேற்கொண்டுவருகின்றோம்.

அதேபோன்று மட்டக்களப்பு நகரில் நீண்டகாலமாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் பாலத்தின் திருத்தவேலைகள் தொடர்பான அறிக்கையினை கோரியுள்ளேன்.அதில் காலதாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.எனவே அதற்கான காரணத்தினை கண்டறிந்து அந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்தி வேறு வழியில் பாலத்தினை புனரமைப்பினை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கையினைமுன்னெடுத்துள்ளேன் என்றார்.