நகர் பகுதி பாடசாலைகளும் முயற்சித்தால் முதலிடம் பெறமுடியும்

Report Print Nesan Nesan in சமூகம்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நாவிதன்வெளி பிரதேச பாடசாலைகள் சாதனைப்படைப்பது சாதாரண விடயமல்ல என சம்மாந்துறை கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் தெரிவித்தார்.

இது ஏனைய பாடசாலைகளுக்கு முன் உதாரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “இந்த பாடசாலை மிகவும் தொலைவில் பின்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ளது.

இந்த பாடசாலையில், சிறந்த பெறுபேற்றைப்பெற்று சாதனை படைத்திருக்கின்றமை அதிபர், மற்றும் ஆசிரியர்களின் தீவிர முயற்சியினால் நடந்துள்ளது.

அவர்களையும், சாதனைப்படைத்த மாணவர்களையும் பாராட்டுகின்றேன்.

இந்த பாடசாலை போன்று நகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகளிலும் அதி தீவிரமான செயற்பாடுகளை முன்னெடுத்தால் கிழக்குமாகாணம் கல்வியில் முதலாம் இடத்திற்கு கொண்டுவரமுடியும்.

நகர் பகுதியில் அதிகமான வளம் இருக்கின்றது. அவ்வாறான பாடசாலைகளில் சாதனை நிலைநாட்டப்பட்டால் அது சாதாரண விடயம். இங்கு பாரிய வளப்பற்றாக்குறை இருக்கின்றது.

இருக்கின்ற வளத்தினை வைத்தே உச்சப்பயனைப் பெறும் திறமையான அதிபர், ஆசிரியர்கள் இருக்கின்றனர். இவர்களைப் போன்று ஏனைய அதிபர், ஆசிரியர்களும் செயற்பட்டால் கல்வின் அடைவை அதிகரிக்க முடியும்.

அண்மையில் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டபோது, கல்வி அமைச்சின் செயலாளருடன் நேரடியாக பேசி இந்தப்பிரதேசத்திற்கு அதிகளவான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கோரியிருந்தேன்.

அந்த வகையில், இந்த பகுதிக்கு நுண்கலைப்பாடத்திற்கும் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த வளங்கள் அனைத்தினையும் பயன்படுத்தி எதிர்காலத்திலும் இவ்வாறு சாதனைகள் படைக்க அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்” என்றார்.