சுமார் ஒரு மணிநேரம் வீதியில் நின்ற மாணவர்கள்

Report Print Thileepan Thileepan in சமூகம்

போதையினால் மாணவர்களின் கல்வி சீரழிவதாக தெரிவித்து வவுனியா முருகனூர் சாரதா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் அண்மைக்காலமாக போதைப்பொருட்களின் பாவனை மற்றும் மதுபான விற்பனை நிலையங்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் பல தரப்பாலும் இதற்கு எதிராக குரல் எழுப்பப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் வவுனியா முருகனூர் சாரதா வித்தியாலயத்தின் மாணவர்கள், பாடசாலை சமூகம், பெற்றோர், சிவில் பாதுகாப்பு குழுவினர், பொலிஸார், சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு என்பன இணைந்து இன்று பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது போதையால் கல்வியை சீரழிக்காதே, போதையால் பொருளாதாரம் சிதைகின்றது, போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம், புகைத்தலை ஒழிப்போம் புற்றுநோயை தடுப்போம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கி, கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பாடசாலை அதிபர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போதை பாவனை குறித்து விளக்கமளித்திருந்தனர்.