திருகோணமலை பட்டதாரிகளுக்கான நேர்முகத்தேர்வு ஆரம்பம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகளை பட்டதாரி பயிலுநர்களாக இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் 18ம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

குறித்த பரீட்சை திருமலை மாவட்டச் செயலகத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அபிருத்தி உத்தியோகத்தர்களாக இணைத்துக்கொள்ளப்படவுள்ள பட்டதாரி பயிலுநர்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என கூறப்படுகின்றது.

இந்த நியமனம் தொடர்பான அறிவுறுத்தல்களை தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது.

பத்திரிகை விளம்பரத்தினூடாக தகவல்கள் பெற்று கடந்த ஆண்டு ஒகஸ்ட் 6ம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 8ம் திகதி வரை விண்ணப்பித்த பட்டதாரிகளுக்கு 31.12.2016ம் ஆண்டு வரை பட்டங்களை பெற்ற 1417 பட்டதாரிகள் இந்த நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டச்சான்றிதழ்கள், கல்விச்சான்றிதழ்கள், பிறப்புச்சான்றிதழ், ஏனைய சான்றிதழ்கள், தேசிய ஆள் அடையாள அட்டை, வதிவிடத்தை உறுதிப்படுத்தப்படும் பிரதேச செயலாளரின் அறிக்கை (Interview), வேலையற்ற பட்டதாரி என்பதை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ் என்பவற்றுடன் நேர்முகத்தேர்வுக்கு சமூகமளிக்குமாறு விண்ணப்பதாரிகள் கோரப்பட்டுள்ளனர்.

இது தவிர மொழித்தேர்ச்சி மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்கள் அந்த சான்றிதழ்களை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் உறுதிப்படுத்துவது அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புள்ளிகள் அடிப்படையில் நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளமையினால் சான்றிதழ்கள், ஆவணங்களை சரியான முறையில் பட்டதாரிகள் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.