கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடியமைக்கான பின்னணி வெளியானது

Report Print Murali Murali in சமூகம்

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி - அறிவியல் நகர் பகுதியில் அகழ்வு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கிளிநொச்சி அறிவியல் நகரின் யாழ். பல்கலைகழகத்தின் விவசாய பீடத்திற்கு பின்புறமாக உள்ள காட்டுப்பகுதியிலேயே அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமையவே இந்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த முன்னாள் போராளி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.

விடுதலைப் புலிகளால் போரின் இறுதியில் கொள்கலன் ஒன்றில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் புதைக்கப்பட்டதாக கூறிய தகவலின் அடிப்படையிலேயே இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி எதற்காக கைது செய்யப்பட்டார், யாரால் கைது செய்யப்பட்டார், எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.