தகப்பன்-மகனுக்கு இடையில் மோதல்: தடுக்கச் சென்றவர் பரிதாபமாகப் பலி

Report Print Kumar in சமூகம்

தகப்பன்-மகனுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை விலக்கச்சென்ற ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று சனிக்கிழமை மாலை கட்டுமுறிவில் உள்ள வீட்டில் தகப்பனுக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ள நிலையில் தகப்பன் மண்வெட்டியினால் மகனை தாக்க முற்பட்ட போது அதனை தடுக்க முற்பட்ட குறித்த பகுதியை சேர்ந்த எஸ்.சௌந்தரராஜன் என்னும் மூன்று பிள்ளைகளின் தந்தை மண்வெட்டியினால் வெட்டப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து அவர் கதிரவெளி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் விக்னேஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் இந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை வாகரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.