ஊடகவியலாளர்களது பணிகளுக்கு இடையூறு வழங்க மாட்டோம்: மனித உரிமை ஆணைக்குழுவில் இராணுவம்

Report Print Theesan in சமூகம்

கடந்த மாதம் 19ம் திகதி அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணி விவகாரம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை வழிமறித்த இராணுவம் அவரது ஊடகப்பணிக்கு இடையூறு விளைவித்ததோடு அச்சுறுத்தலும் விடுத்திருந்தனர்.

இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குறித்த ஊடகவியலாளரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய ஊடகவியலாளர் மற்றும் இராணுவ தரப்பினரை வவுனியா மனித உரிமை ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்திருந்தனர்.

வவுனியா மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியும், சட்டத்தரணியுமான லீனஸ் வசந்தராஜ் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்றன.

அந்தவகையில், மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டமை தொடர்பில் என்ன பரிகாரம் கிடைக்க வேண்டுமென ஊடகவியலாளரிடம் கோரப்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய ஊடகவியலாளர், “தான் மற்றும் சக ஊடகவியலாளர்கள் சுயாதினமாக பணிபுரிய இராணுவம் இடையூறு வழங்க கூடாது எனவும் எனக்கு உயிராபத்தை விளைவிக்க கூடிய யாரும் அங்கு இல்லை. எனவே அவ்வாறு ஒரு நிலை ஏற்படுமானால் அதற்கு இராணுவ தரப்பே பொறுப்பு” எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, அவ்வாறு எந்த ஒரு நிகழ்வும் இராணுவத்தால் நிகழாது என உத்தரவாதம் கோரப்பட்டது. அதற்கு இராணுவத்தரப்பு இணங்கி மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூல ஆவணம் வழங்கியுள்ளது.

அளம்பில் பிரதேசத்தில் துயிலும் இல்லம் அமைந்திருக்கும் தனியார் காணியொன்றை கையகப்படுத்தும் முயற்சியில் இராணுவம் ஈடுபடுவதாக வெளியான தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு கடந்த மாதம் 19 ம் திகதி முல்லைத்தீவு பிராந்திய செய்தியாளர் சென்றிருக்கின்றார்.

குறித்த இடத்திற்குச் சென்ற ஊடகவியலாளரை தடுத்த படையினர், அவரை அழைத்துச் சென்று வீடியோ கமராவை சோதனையிட முயற்சித்துள்ளனர்.

எனினும் அதற்கு ஊடகவியலாளர் சம்மதிக்காத படியினால் அவரிடம் சிறிது நேரம் இராணுவத்தின் உயரதிகாரி ஒருவர் விசாரணை செய்துள்ளார்.

இதனிடையே அந்த இடத்திற்கு வந்த மற்றுமொரு படை அதிகாரி, “இது உங்கள் காலம் என்பதால் ஆடுகிறீர்களோ”? என்று கடுந்தொனியில் ஊடகவியலாளரிடம் பேசியுள்ளார். அத்தோடு ஊடகவியலாளரை வீடியோ பதிவு செய்துள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த சம்பவமானது உடனடியாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவின் காதுகளுக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இதையடுத்து இதில் தலையிட்ட இராணுவ ஊடகப் பேச்சாளர்,

குறித்த தமிழ் ஊடகவியலாளரை விசாரணையின்றி விடுவிப்பதற்கு இராணுவப் படை அதிகாரிகளுக்கு பணித்திருப்பதாகவும், ஆனால் அதற்கு முன்னரே அந்த தமிழ் ஊடகவியலாளர் விசாரணை முடிவுற்றதன் பின்னர் திரும்பியமையும் குறிப்பிடத்தக்கது.