சம்பள நிலுவைக் கொடுப்பனவுகள் கிளிநொச்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை

Report Print Kaviyan in சமூகம்

ஏனைய வலய ஆசிரியர்களுக்குச் சம்பள நிலுவைகள் வழங்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் கிளிநொச்சி வலய ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவைக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திலுள்ள ஏனைய வலயக்கல்வி அலுவலகங்களின் கீழ் கடமையாற்றும் பயிற்றப்பட்ட ஆசிரியர்களின் சம்பள நிலுவைக் கொடுப்பனவுகள் உரிய காலத்தில் வழங்கப்பட்டபோதிலும் கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் சேவையாற்றும் பயிற்றப்பட்ட ஆசிரியர்களின் சம்பள நிலுவைக் கொடுப்பனவுகள் இன்னும் வழங்கப்படாத நிலை காணப்படுவதாகக் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் தொடரந்தும் தெரிவிக்கப்படுவதாவது,

வடமாகாணத்தில் நீண்ட காலமாக மிகவும் குறைந்த சம்பளத்திற்குச் சேவையாற்றி, ஆசிரிய பயிற்சியை முடித்துக்கொண்ட பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவைக் கொடுப்பனவுகள் கடந்த ஜனவரி மாதம் முற்பகுதியில் வழங்கப்பட்டிருந்தன.

ஆனாலும் வடமாகாணத்திலுள்ள கிளிநொச்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் எவருக்குமே சம்பள நிலுவைக் கொடுப்பனவுகள் எவையும் வழங்கப்படவில்லை.

இது குறித்து உரிய ஆசிரியர்களால் கேட்கப்பட்ட போது அவர்களுக்கான சம்பள நிலுவைகள் பெப்ரவரி மாதம் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டது.

பெப்ரவரி மாதம் கேட்கப்பட்ட போது வடமாகாணத்தால் கிளிநொச்சி வலயத்திற்கான சம்பள நிலுவைக் கொடுப்பனவுக்குரிய நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் உங்களுக்கான சம்பள நிலுவைக் கொடுப்பனவுகள் அனைத்தும் கிடைக்கும் எனக் தெரிவிக்கபட்டுள்ளது.

ஆனால் சித்திரைப் புத்தாண்டு வந்தும் இவர்களுக்கான சம்பள நிலுவைக் கொடுப்பனவுகள் எவையும் வழங்கப்படவில்லை.

நாட்டிலுள்ள ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவைக் கொடுப்பனவுகளை 2018 ஜனவரி மாதம் வழங்குவதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்தது.

இருந்த போதிலும் சில மாகாணங்களின் கீழ் சேவையாற்றும் உத்தியோகத்தர்கள் சிலரது அசமந்தப் போக்குக் காரணமாக ஆசிரியர்களுக்கு உரிய காலத்தில் கிடைக்க வேண்டிய சம்பள நிலுவைக் கொடுப்பனவுகள் குறிப்பிட்ட காலப்பகுதியில் வழங்கப்படாது காலம் தாழ்த்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை கடந்த ஜனவரி மாதம் கிளிநொச்சி வலய ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவைக் கொடுப்பனவுகள் வழங்குவதற்கான சம்பளப்பட்டியல் தயாரிக்கப்பட்டு உரிய ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட போதிலும் திடீரென அது ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், சில இடங்களில் ஆசிரியர்களுக்குரிய சம்பள நிலுவைக் கொடுப்பனவுக்கான நிதி ஒதுக்கப்பட்டு உரிய நிதி கிடைத்துள்ள போதிலும் அங்குள்ள உத்தியோகத்தர்கள் சிலரால் அவர்களுக்குரிய சம்பள நிலுவைக் கொடுப்பனவுகளை உரிய காலப் பகுதியில் வழங்காது இன்னும் வேலை முடியவில்லை நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறி வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்பட்டு வருவதாக பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.