விளையாட்டுத்துறை மூலம் இளைஞர் யுவதிகள் மன வலிமையினை பெற்றுக்கொள்ள முடியும்

Report Print Kumar in சமூகம்

விளையாட்டுத்துறை மூலம் இளைஞர், யுவதிகள் மன வலிமையினையும், வேலைவாய்ப்பினையும் பெற்றுக்கொள்ளமுடியும் என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, இருதயபுரம் கிழக்கு யுத் அக்ஸசன் இளைஞர் கழகத்தின் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இருதயபுரம் கிழக்கில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான காணியை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று விளையாட்டின் முக்கியத்தும் உணரப்படாத நிலையிலேயே பலர் இருக்கின்றனர். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் பிள்ளைகளை விளையாட்டுக்கு செல்லவிடாமல் பெற்றோர் தடை விதிக்கும் நிலையும் இருக்கின்றது.

எதிர்காலத்தில் விளையாட்டுத்துறை மூலம் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் பிள்ளைகளுக்கு கிடைக்கின்றது.

அத்துடன், இன்று தற்கொலைகள் அதிகரித்துள்ள நிலையில் காணப்படுகின்றன. வெற்றி தோல்விகளை ஜீரணித்துக்கொள்ளாத நிலைமையே இந்த தற்கொலைகளுக்கு காரணமாக அமைகின்றன.

இவ்வாறான நிலையில் தமது பிள்ளைகளை விளையாட்டுத்துறைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் மன வலிமையினையும், உடல் வலிமையினையும் பெற்றுக்கொள்ளமுடியும்.

அண்மையில் 3800 இளைஞர், யுவதிகள் கா.பொ.த.சாதாரண தர சித்தியுடன் விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்களாக தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

விளையாட்டுத்துறைக்கு செல்வதால் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியாது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு யுத் அக்ஸசன் இளைஞர் கழகத்தின் தலைவர் ஜி.ருக்சிகா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிராமசேவையாளர் சுகந்தினி, பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது, பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அதில் கலந்துகொண்டவர்களுக்கு பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.