விடுவிக்கப்பட்ட யாழ். வலிகாமம் காணிகளில் பெருமளவான வெடிபொருட்கள்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

யாழ். வலிகாமம் வடக்கில் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக படையினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அபாயகரமான வெடி பொருட்கள் அகற்றப்படாத நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பெருமளவான வெடிபொருட்கள் காணப்படுவதால் அப்பகுதிகளை துப்புரவு செய்வதற்கே அச்சமாக உள்ளதாகவும் பொறுப்பானவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

28 வருடங்களாக வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 683 ஏக்கர் நிலம் கடந்த 13ஆம் திகதி மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் மீள கையளிக்கப்பட்டிருக்கின்றது.

28 வருடங்கள் மக்கள் நடமாட்டமே இல்லாமல் இருந்த மேற்படி 683 ஏக்கர் நிலப்பகுதி பற்றை காடாக காட்சியளிப்பதுடன், தற்போது காணிகளுக்கு சொந்தமான மக்கள் தமது காணிகளை துப்புரவாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த பகுதிகளில் ஆங்காங்கே வெடிபொருட்கள் இருப்பதாகவும், குறிப்பாக, தென்மயிலை கிராமத்தில் கிணற்று தொட்டி ஒன்றுக்குள் பெருமளவான வெடிபொருட்கள் இருப்பதை அவதானித்த மக்கள் கடந்த 14ம் திகதி பொறுப்புவாய்ந்த தரப்புக்களுக்கு வெடிபொருட்கள் உள்ளமை தொடர்பாக அறிவித்ததாகவம் தெரிவிக்கின்றனர்.

எனினும், அன்றைய தினம் புதுவருடம் என்பதால் வெடி பொருட்களை அகற்றுவதற்கு ஆட்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிணற்று தொட்டிக்குள் வெடி பொருட்கள் இருப்பதை மக்கள் அடையாளம் கண்ட பின்னர் அங்கிருந்து பல வெடி வொருட்கள் காணாமல் போயுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

வெடி பொருட்கள் உள்ள பகுதியில் பற்றைகளை வெட்டி துப்புரவு செய்யவும், நடமாடவும் அச்சமாக உள்ளதாகவும், இந்த வெடி பொருட்களை விரைவாக அகற்றி மக்கள் அச்சமில்லாமல் தமது காணிகளை துப்புரவு செய்து மீள்குடியேறுவதற்கான ஒழுங்குகளை பொறுப்புவாய்ந்தவர்கள் செய்து கொடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.