ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதலில் தமிழ் மக்களின் இதயத் துடிப்பு மௌனித்தாலும், மறக்க முடியாத நினைவுகள்

Report Print Nivetha in சமூகம்

கருணாரட்ணம் அடிகளார், படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டு இன்றுடன் பத்து வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது.

தமிழீழ மக்கள் அனைவராலும் கிளி பாதர் என செல்லமாக அழைக்கப்படும் கருணாரட்ணம் அடிகளார், போர் நெருக்கடி மிக்க காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், மக்களின் துன்ப துயரங்களை வெளி உலகிற்கு கொண்டு வருவதற்காகவும் நன்கு கடுமையாக உழைத்தவர்.

அவரின் இழப்பு தமிழர்களை பொருத்தவரை பேரிழப்பாக காணப்படுகின்றது. மிகுந்த வேதனை ஒருபுறம் இருந்தாலும் அவரின் பணிகளை நினைக்கும் போது அவற்றை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய சூழலில் நாம் இன்று இருக்கிறோம்.

அவர் ஒரு பங்கு தந்தையாக குறிப்பிட்ட கிறிஸ்தவ மக்களுக்கு மட்டும் அல்ல வன்னி மக்களின் ஒட்டு மொத்த தந்தையாகவும் காத்து நின்றார்.

அத்துடன் மண்ணின் விடுதலைக்கும், மக்களின் விடுதலைக்கும் மிகப்பெரும் பங்காற்றியுள்ளார். கடந்த 1995ஆம் ஆண்டில் இரணைமாதா நகர் பகுதியில் அவரது பங்கு இருந்த போதும் அவர் இடம்பெயர்ந்த மக்களிற்காக தன்னை ஆழமாக ஈடுபடுத்தினார்.

போரினால் ஏற்பட்ட துன்பங்களையும், வடுக்களையும் ஆற்றுவதற்கு பல்வேறு நிகழ்ச்சி நிரல்களுடன் சர்வதேச நிறுவனங்களை நாடினார்.

இக்காலத்தில் தான் வெரித்தாஸ் தமிழ் பணிக்கு வடபகுதி தொடர்பாளராகவும் பணியாற்றி மக்களின் துன்ப, துயரங்களை வெளி உலகிக்கும் கிறிஸ்தவ மக்களுக்கும் தெரியப்படுத்தினார்.

கடந்த 1998இல் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணை தலைவராக இருந்து மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்கினார்.

வவுனிக்குளம் தேவாலயத்திலும், மல்லாவி பங்கிலும் தனது பணிகளை 2002 வரை தொடர்ந்தார். அந்த தேவாலயம் பலமுறை இராணுவ தாக்குதலில் அகப்பட்டாலும் அதை விட்டு அகலாது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியுள்ளார்.

மனித உரிமை செயற்பாடுகள் தமிழர் தாயகத்தில் குறிப்பாக வடக்கு கிழக்கில் சுயாதீனமாக செயற்பட வட-கிழக்கு மனித உரிமை அமைப்பின் தலைமை பொறுப்பை கையேற்று மிகவும் சிறப்பாக பணியாற்றினார்.

சமாதான காலத்தில் வரும் இராஜ தந்திரிகளுக்கு, எம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இன சுத்திகரிப்பை மிகவும் நேர்த்தியாக தெரிவித்துக்கொண்டு இருந்தார்.

இறுதியாக பணியின் நிமித்தம் தனது பங்கு மக்களையும், ஆலயத்தையும் பார்க்க சென்று விட்டு திரும்பும் வழியில் நயவஞ்சக தாக்குதலில் மக்களை விட்டு சென்று சென்றார்.

தாக்குதலில் பலியான பின்னரும் அப்போதைய அரசின் சில சிங்கள ஊடகங்கள் கிளி பாதர் அவர்களை புலி என வர்ணித்து செய்தி வெளியிட்டுள்ளன.

அப்போதைய பாதுகாப்பு அமைச்சரும், வெள்ளை உடுப்பு போட்ட புலிகளின் தலைவர் இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டார் என அறிக்கையை விடுத்திருந்தார்.

வெள்ளை உடுப்பு போட்ட புலி என வர்ணிப்பதன் மூலம் மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகள் எத்தகைய முக்கியத்துவம் பெற்றது என்பதை சொல்லாமல் சொல்லி சென்றது மனித விடுதலை போராட்டமானது தனித்து மண் விடுதலை மட்டும் இன்றி மனித சமூதாய விடுதலையின் விழுமியங்களை உள்ளடக்கியதாக உள்ளது என்பதை மேற்கு உலகுக்கு தெரிவிப்பதில் அவர் பங்கு அளப்பரியது.

இதேவேளை, கடந்த 30 ஆண்டுகாலப் போரின் போது கத்தோலிக்க மதகுருமார் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

யுத்த காலத்திலும் சரி, இன்றும் சரி, கத்தோலிக்க மதகுருமார் பலர் தமிழ் மக்களுக்கு ஆற்றும் சேவைகள் என்றும் மக்கள் மத்தியில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers