வலி வடக்கில் வளமான பகுதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்: சி.வி குற்றச்சாட்டு

Report Print Murali Murali in சமூகம்
119Shares

யாழ். வலி வடக்கில் வளமான பகுதிகளை இராணுவம் தொடர்ந்தும் கையகப்படுத்தி வைத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்ட வலி வடக்கு பகுதிக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட முதலமைச்சர் அந்த பகுதியினை பார்வையிட்டார்.

அத்துடன், அப்பகுதிகளில் மீள்குடியேறிவரும் மக்களை நேரில் சந்தித்த முதலமைச்சர், அவர்களின் மீள்குடியேற்றத்திலுள்ள குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “ வலி வடக்கில் வளமான பகுதிகளை இராணுவம் தொடர்ந்தும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றது.

காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் மீள்குடியேற்றம் தொடர்பில் இன்னும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.

மக்களின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு அதில் இராணுவத்தினர் புதிய கட்டடங்களை அமைத்துள்ளனர். இவ்வாறான கட்டடங்களை இடிக்காமல் நிர்வகிப்பது தொடர்பில் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினர்களுடன் கலந்துரையாடப்பட வேண்டும்.

மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இன்றும் நிறைய இருக்கின்றன. கூடிய விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.