சம்மாந்துறை பிரதேசத்தில் கடந்த முதலாம் திகதி தங்க நகைகள் மற்றும் பணம் என்பவை கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனறாகலை, தம்பகல்ல என்ற இடத்தைச் சேர்ந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மல்கம் பிட்டி சுவீஸ் கோல்ட் ஹவுஸ் நகைக்கடையிலிருந்து சுமார் 27 இலட்சம் ரூபா பெறுமதியான 52 பவுண் தங்க நகைகளும், 75 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
குறித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் சம்மாந்துறைப் பொலிஸ் பொறுப்பதிகாரியான இப்னு அன்ஸர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புபட்ட நபரொருவரை புலனாய்வு பிரிவினர்களின் உதவியோடு பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.