யாழில் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்ற தந்தை உயிரிழப்பு! அதிதீவிர சிகிச்சை பிரிவில் பிள்ளைகள்

Report Print Sumi in சமூகம்

யாழில் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த தந்தையொருவர் உயரிழந்துள்ள நிலையில், பிள்ளைகள் இருவரும் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், மூவரும் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தந்தை சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் கிராம மக்கள் கூறுகையில்,

சாவகச்சேரி - மீசாலை கிழக்கு பகுதியை சேர்ந்த குறித்த குடும்பத்தில் கணவனுக்கும், மனைவிக்குமிடையில் அடிக்கடி முரண்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளது.

எனினும் அவர்களின் உறவினர்கள் கணவன் மனைவியரை சமாதானப்படுத்தி ஒற்றுமையாக வாழ வைத்துள்ளனர்.

இருந்தபோதும் அவர்களுக்குள் தொடர்ந்தும் பிரச்சினைகள் இருந்தாலும் 10 வயதான மகன் மற்றும் 4 வயது மகள் ஆகியோரின் நன்மை கருதியும் சமூகத்தின் நிலைப்பாட்டாலும் ஒரே வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அரசியல் கட்சியொன்றின் சார்பான அமைப்பினூடாக குறித்த குடும்பப் பெண்ணுக்கென தனியானதொரு தற்காலிக வீடு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் குடும்பப்பெண் கணவரைப் பிரிந்து இரண்டு பிள்ளைகளோடு தனியாக வாழத்தொடங்கியுள்ளார்.

மனைவியும், பிள்ளைகளும் தன்னை பிரிந்து வாழ்ந்ததால் மிகவும் மனமுடைந்து விரக்திக்குஉள்ளாகியதாலேயே குறித்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.