சுவிட்ஸர்லாந்தில் அறிமுகமாகும் புலிகளின் அடையாள அட்டை

Report Print Dias Dias in சமூகம்
2028Shares

அக்கினிப் பறவைகள் என்ற சுவிட்சலாந்தில் செயற்படும் தமிழ் இளைஞர் அமைப்பினர் தமிழீழ அடையாள அட்டையை வெளியிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

சுவிஸ், பேர்ண் மாநகரில் இது தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு தொடர்பான விபரங்களை அக்கினிப் பறவைகள் அமைப்பினர் வெளியிட்டதுடன், எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவுப்படுத்தியிருந்தனர்.

இது தொடர்பில் அக்கினிப் பறவைகள் அமைப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

மீள் வெளியீடு செய்யப்படும் தமிழீழ அடையாள அட்டையானது தற்கால உயர் தொழில்நுட்பத்துடன் கூடியதாக நன்கு திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

01.01.2007 அன்று தமிழீழ நிர்வாகக் கட்டமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கோடு தமிழீழத்தில் தேசிய அடையாள அட்டை வெளியிடப்பட்டிருந்தது. 2009ம் ஆண்டு தமிழிறைமை பறிக்கப்பட்டதன் விளைவாக தமிழீழ தேசிய அடையாள அட்டையின் பயன்பாடு இல்லாமல் போனது.

இதனை மீளவும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் அக்கினிப் பறவைகளின் இந்த முயற்சி இன்றைய சூழ்நிலையில் தேவையானதா என்ற வினா எழுவது இயல்பானதே.

2009ம் ஆண்டில் இடம்பெற்ற தமிழினத்திற்கெதிரான வல்லாதிக்க சக்திகளின் கூட்டுச்சதி நடவடிக்கையானது இனவழிப்பு என்பதையும் தாண்டி தமிழீழ நடைமுறை அரசையும் இல்லாமற்செய்துவிட்ட ஒரு தேசிய அழிப்பு நடவடிக்கையாகும். தமிழீழ நடைமுறை அரசின் அழிவோடு தமிழீழக் கோட்பாட்டின் நடைமுறைச் சாத்தியமும் வலுவிழந்துபோயிருப்பதும் வெளிப்படை.

தற்போது தமிழீழம் என்பது பெரும்பாலும் வெறும் நினைவுகளில் வாழ்ந்து வருகின்ற ஒன்றாகவே காட்சியளிக்கிறது.

தமிழீழத் தேசியக்கட்டுமானம் என்பது நினைவுகளில் மட்டுமின்றி நடைமுறையிலும் பேணப்படவேண்டும். தமிழீழ இறைமையானது சரணாகதியடையவோ, தாரை வார்க்கப்பாடவோ இல்லை என்பதை நந்திக்கடல்வரை இடம்பெற்ற வீரம் செறிந்த மற்றும் பெரும் ஈகத்துடன்கூடிய போர் எமக்குப் புலப்படுத்தி நிற்கிறது என குறிப்பிடபட்டுள்ளது.