வவுனியாவிற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரருக்கு வரவேற்பு

Report Print Theesan in சமூகம்
55Shares

சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் சுவட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வட மாகாணத்திற்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த வவுனியா மாவட்ட விளையாட்டு வீரரை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளதுடன், சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் சுவட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வவுனியா மாவட்ட விளையாட்டு வீரர் சிவானந்தன் கிந்துசன் வெண்கலப்பதக்கம் பெற்று மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அத்துடன், அவரது சொந்த இடமான வவுனியாவிற்கு வந்து இறங்கியதும் மாவட்ட விளையாட்டுக்கழக உத்தியோகத்தர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் அனைவராலும் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த கிந்துசன்,

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப்போட்டிகளில் சுவட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளேன்.

இதையிட்டு மிகவும் மகிழ்வடைகின்றேன். எனது இலட்சியம் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெறுவதற்கென்றே எண்ணியிருந்தேன். எனக்கு பயிற்றுவித்த நவனீதனுக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பல விளையாட்டு வீரர்கள் திறமையானவர்கள் இருக்கின்றார்கள். எமது திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு எமக்கு பயிற்றுவிப்பாளர் ஒருவர் கிடைத்துள்ளார்.

அவருக்கு மேலும் வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும். விளையாட்டு அமைச்சினால் எமது பயிற்றுவிப்பாளருக்கு எவ்விதக் கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை.

மேலும், எமது வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளர் இலவச சேவையினையே மேற்கொண்டு வருகின்றார். அவருக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கும் இடத்தில் பல வீரர்களை எமது மாவட்டத்தில் உருவாக்க முடியும் எனவும் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.