வடமாகாணக் கல்வி அமைச்சின் செயல்திறனின்மையால் மாணவர்களின் கல்வி பாதிப்பு!

Report Print Kaviyan in சமூகம்

வடமாகாணத்தில் மாணவர்களின் கல்வி தொடர்ந்தும் பாதிக்கப்படுவதற்கு வடமாகாணக் கல்வி அமைச்சின் சரியான திட்டமிடல்கள் இன்மையேதான் பிரதான காரணம் என பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அதிபர்களை உரிய முறைமையைப் பின்பற்றி இடமாற்றம் செய்யாது சிலரது விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொற்றோர்கள் தெரிவிக்கையில்,

வடமாகாணத்திலுள்ள பல பாடசாலைகளில் பணிபுரியும் அதிபர், ஆசிரியர்களுக்கு அவர்கள் குறித்த பாடசாலையில் சேவையாற்ற வேண்டிய காலப்பகுதியைக் கருத்திற்கொள்ளாது அவர்களது விருப்பு வெறுப்புக்களுக்கேற்ப இடமாற்றங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, சில பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்கள் அந்த பாடசாலைகளில் பணிபுரிய வேண்டிய காலப் பகுதியையும் தாண்டி இடமாற்றங்கள் ஏதுமற்ற நிலையில் நீண்ட காலமாக பணிபுரிந்து வருகின்றார்கள்.

இவர்கள் அந்த பாடசாலைகளில் ஒரு நாட்டாமை போல் செயற்படுகின்றார்கள். இடமாற்ற காலத்தையும் தாண்டி குறித்த பாடசாலைகளில் நீண்ட காலமாகச் சேவையில் இருக்கும் சில அதிபர்களும், சில ஆசிரியர்களும் அப்பாடசாலைகளில் விதிமுறைகளையும் மீறி தாம் நினைத்தபடி தன்னிச்சையாகச் செயற்பட்டு வருகின்றார்கள்.

இதனால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இப்படியான சம்பவங்கள் கிராமப்புறப் பாடசாலைகளில் இடம்பெற்று வருகின்றன. இதற்கு உயரதிகாரிகள் ஆசி வழங்கி வருகின்றார்கள்.

இப்படியானவர்கள் சிலர் மாணவர்களைக் கண்டபடி தாக்கிக் காயப்படுத்துதல், உளவியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எல்லோர் முன்னிலையிலும் மாணவர்களின் குடும்பப் பின்னணி, வறுமை போன்றவற்றைச் சுட்டிக்காட்டி இழிவாகப் பேசுதல், சட்டையைக் கிழித்தல், நீண்ட நேரம் முழங்காலில் நிற்குமாறு வற்புறுத்துதல்,

பல தடவைகள் தோப்புக்கரணம் போடுமாறு வற்புறுத்தல், கையை மேல் நோக்கிக் கட்டிப்போட்டுத் தாக்குதல், வறுமையின் காரணமாக கூலி வேலை செய்துகொண்டிருக்கும் தந்தை, தாயை உடனடியாக அழைத்து வருமாறு கூறுதல், அதிபர், ஆசிரியர் தாக்கி உடல் காயங்கள் ஏற்பட்டால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம் சென்றால் உங்களின் பிள்ளையின் எதிர்காலம் பாதிக்கப்படும், அடித்தது நன்மைக்குத்தானே என்று பெற்றோரை அடிபணிய வைத்தல் போன்ற சம்பவங்கள் பல கிராமப்புறப் பாடசாலைகளில் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான சம்பவங்கள் ஊடகங்களிலும் வெளிவராது மூடி மறைக்கப்பட்டு வருகின்றன. வடமாகாணத்தில் குறிப்பிட்ட பல பாடசாலைகளில் அதிபர்களுக்குரிய இடமாற்றங்கள் வழங்கப்பட வேண்டிய காலத்தைக் கடந்த நிலையிலும் அவர்களது மேல் மட்டச் செல்வாக்குக் காரணமாக இடமாற்றங்கள் வழங்கப்படாத நிலை தொடர்ந்து செல்கின்றது.

இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் மாணவர்கள்தான். வடமாகாணப் பாடசாலைகளில் குறித்த காலப் பகுதியையும் தாண்டி நீண்ட காலமாகச் சேவையாற்றி வரும் அதிபர்கள் சிலர் அப்பாடசாலையில் தமக்கேற்ற அடாவடிக் குழுவொன்றை வைத்திருந்து மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தட்டிக் கேட்கும் ஆசிரியர்களையும் அவமானப்படுத்தி, கேள்வி கேட்க வரும் பெற்றோரையும் அவமானப்படுத்தி மிரட்டி விடுவார்கள்.

இவ்வாறானவர்களுக்கு உயரதிகாரிகள் பலரது ஆதரவும், பக்கபலமும் இருந்து வருகின்றது. அவர்களால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டு கல்வியைத் தொடரமுடியாது இடைவிலகிச் சென்றுள்ளார்கள்.

தற்போதும் குறிப்பாக வன்னிப் பகுதிகளிலுள்ள பாடசாலைகள் சிலவற்றில் அவமதிக்கப்பட்ட சில மாணவர்கள் பாடசாலைப் பக்கமே செல்ல மாட்டன் என்ற நிலையிலுள்ளார்கள்.

சில பாடசாலைகளில் அதிபர்கள் தமக்குப் பிடிக்காத மாணவர்களை வேறு பாடசாலைகளுக்குப் போகுமாறு வற்புறுத்தியும் வருகின்றார்கள்.

இதற்குக் காரணம் வடமாகாணக் கல்வி அமைச்சின் பக்கச்சார்பான சுயநலப் போக்கே என பொற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், செய்யாத குற்றங்களுக்காக மாணவர்களைக் குற்றவாளிகளெனத் தண்டனை வழங்குபவர்களை, மாணவர்களை உடல், உள ரீதியாகப் பாதிப்படைய வைப்பவர்களை வடமாகாணக் கல்வி அமைச்சு பாதுகாத்து வருகின்றதா? எனமாணவர்களின் பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.