மேதின கூட்டத்தில் ஆதரவாளர்களால் வீசப்பட்ட கழிவு பொருட்களை அகற்றும் நடவடிக்கை

Report Print Thirumal Thirumal in சமூகம்

மே தினத்தை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மே தின கூட்டங்கள் இடம்பெற்றன.

இந்த நிலையில் நுவரெலியா மாநகரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கூட்டமும், தலவாக்கலை நகர சபை பொது மைதானத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கூட்டமும் நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது கட்சி ஆதரவாளர்களால் கொண்டு வரப்பட்ட உணவு பொதி, பொலித்தீன், குடிநீர் போத்தல்கள், யோகட் கப் என பல்வேறு பொருட்களை மைதானத்தில் ஆங்காங்கே வீசி கிடப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மைதானத்தின் சூழல் மிகவும் அசுத்தமான நிலையில் காட்சியளித்ததோடு, வீசப்பட்ட மிஞ்சிய உணவுகளையும், ஏனைய உணவு பொருட்களையும் அப்பகுதியில் சுற்றித் திரியும் காகம், கட்டாகாலி நாய்கள், குதிரைகள் என்பன உண்பதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், கூட்டம் நடைபெற்ற நுவரெலியா நகர பகுதியில் ஆதரவாளர்கள் ஊடாக பிரதான பாதையின் மக்கள் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கம்பிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், சூழலுக்கு அழகு சேர்த்த மரங்களும், பூஞ்செடிகளும் ஆதரவாளர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா நகரத்தில் சேதப்படுத்தப்பட்ட இடங்களையும், வீசி சென்ற குப்பைகளையும் மாநகர சபை ஊழியர்கள் அப்புறப்படுத்தப்பட்டாலும் சினிசிட்டா விளையாட்டு மைதானத்தில் வீசப்பட்ட குப்பைகள் இன்னும் அப்புறப்படுத்தபடவில்லை என பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, தலவாக்கலை நகர சபை பொது மைதானத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மே தின கூட்டத்தின் போது, கலந்து கொண்ட ஆதரவாளர்களால் வீசப்பட்ட கழிவு பொருட்கள் மைதானத்தில் ஆங்காங்கே சூழலுக்கு அசுத்தமான நிலையில் காணப்படுவதுடன், அப்பகுதியில் காணப்பட்ட வடிகான்களில் குப்பைகள் நிறைந்துள்ளதாகவும் இந்த பகுதி மக்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.

மேலும், இவ்வாறு காட்சியளிக்கப்பட்ட கழிவு பொருட்கள் தலவாக்கலை நகர சபை ஊழியர்களால் இன்று சுத்தம் செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.