பாதுகாப்பற்ற புகையிரத கடவையால் அல்லலுறும் பொதுமக்கள்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாமாங்கம், இருதயபுரம் பிரதான வீதிக்கு குறுக்கே செல்லும் புகையிரத கடவை பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதனால் அவ்வீதி ஊடாக செல்லும் பயணிகள் பெரும் அச்சத்தின் மத்தியில் பயணிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மட்டக்களப்பு மாமாங்கம் – இருதயபுரம் பிரதான வீதிக்கு குறுக்கே செல்லும் மட்டக்களப்பு கொழும்புக்கான பிரதான புகையிரத பாதையில் உள்ள கடவையே இவ்வாறு பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் நாளாந்தம் இந்த வீதியூடாக பயணிப்பதாகவும், இந்த வீதியில் உள்ள புகையிரத கடவைக்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்படாமல் இருப்பதனால் பயணிக்கும் வாகனங்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், அண்மையில் இவ்விடத்தில் வாய் பேச முடியாத இளைஞன் ஒருவர் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், உரிய அதிகாரிகள் இதற்காக உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இப்பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.