வறட்சி நிலையை சமாளிக்க முன்னாயத்த நடவடிக்கை

Report Print Dias Dias in சமூகம்

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பொது கிணறுகள் அனைத்தும் புனரமைப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வரவிருக்கின்ற வறட்சியுடன் கூடிய காலநிலையை சமாளிப்பதற்காகவும், மக்களுக்கு இடைவெளிகளற்று தொடர்ச்சியாக முறையான குடிநீர் விநியோகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த செயற்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனடிப்படையில் புனரமைப்புச் செய்யப்பட வேண்டிய கிணறுகளின் எண்ணிக்கை, எவ்வகையாக புனரமைப்புச் செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பாக ஒரு கள ஆய்வுப் பயணமொன்றை பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தலைவர் சு.சுரேன் மேற்கொண்டு நிலமைகளை நேரடியாக ஆராய்ந்து வருகின்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

அந்தந்த கிராமங்களின் பொது அமைப்புக்கள் சார்ந்தவர்களின் ஆலோசனைகளையும் பெற்று இனி வருகின்ற காலங்களில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நிர்வாகப் பிரதேசத்துக்குள் குடிநீருக்கான தட்டுப்பாடுகளை நிரந்தரமாகவே நீக்கி மக்களின் அடிப்படைத் தேவையான நீரை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.