பனங்காட்டில் புத்திக்கூர்மை! யாழில் படையினரின் கண்காட்சி

Report Print Sumi in சமூகம்

யாழ். மாவட்டத்தில் பனங்காட்டில் புத்திக்கூர்மை என்னும் புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி யாழ். மாவட்ட படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணப் படைத் தலைமையகத்தின் எற்பாட்டில் இராணுவத்தினரின் கண்டுபிடிப்புக்களை வடக்கு மக்களுக்கு பயன்பெற வைக்கும் நோக்கில் இந்த கண்காட்சி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது.

யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தலைமையில் இடம்பெற்ற ஆரம்பநிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இளைஞர் யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் புதிய படைப்புக்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக யாழ். மாவட்டத்திற்குட்பட்ட படைப்பிரிவுகளிலுள்ள இராணுவ வீரர்களினால் உருவாக்கப்பட்டுள்ள சுமார் 280ற்கும் மேற்பட்ட புதிய கண்டு பிடிப்புக்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியை யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

வடமாகாண ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாண பிரதி தபால் மா அதிபர் மதுமதி, இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.