நினைவு சின்னத்தினை அமைப்பதற்கு மட்டக்களப்பு மாநகரசபை அனுமதி

Report Print Kumar in சமூகம்

உயிர்நீர்த்த ஊடகவியலாளர்களின் நினைவாக மட்டக்களப்பு காந்திபூங்காவில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கான இடத்தினை வழங்குவதற்கான அங்கீகாரத்தினை மட்டக்களப்பு மாநகரசபை ஏகமனதாக வழங்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தினால் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உயிர்நீர்த்த தமிழ் ஊடகவியலாளர்களின் நினைவாக நினைவுத்தூபி ஒன்றை அமைப்பதற்கு இடமொன்றினை வழங்குமாறு மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவனிடம் எழுத்துமூலமான கோரிக்கையினை விடுத்திருந்தது.

அண்மையில் மாமனிதர் சிவராமின் நினைவேந்தல் நிகழ்வின்போது இந்த கோரிக்கையினை எழுத்துமூலமாக வழங்கியிருந்தது.

இது தொடர்பில் இன்று நடைபெற்ற மட்டக்களப்பு மாநகரசபையின் முதலாவது விசேட அமர்வின்போது மட்டக்களப்பு மாநகர முதல்வரினால் சபையின் அனுமதிக்காக விடப்பட்டிருந்தது.

இதன்போது சபையினால் குறித்த கோரிக்கை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதற்கான இடத்தினை வழங்குவதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உயிர்நீத்த தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி தொடர்ச்சியான போராட்டங்களை நடாத்திவரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம், தொடர்ச்சியாக உயிர்நீர்த்த ஊடகவியலாளர்களின் நினைவாக நினைவுத்தூபி அமைக்கும் பணியையும் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.