விலையேற்றத்தை அடுத்து யாழில் எரிபொருள் பதுக்கள்: அதிரடி நடவடிக்கை எடுத்த நுகர்வோர் அதிகார சபை

Report Print Murali Murali in சமூகம்

யாழ்பாணத்தில் எரிபொருள் விநியோகஸ்தர்கள் சிலர் மேற்கொண்ட பதுக்கல் நடவடிக்கையினை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் அதிரடியாக தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இன்று நல்லிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் பல பாகங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் பொது மக்கள் மும்முரமாக இருந்தனர்.

எனினும், இதனை சிலர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர்.

அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் எரிபொருள் விநியோகஸ்தர்கள் சிலர் மேற்கொண்ட பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

யாழில் இன்று பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

எனினும், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் விநியோகத்தை நிறுத்திய சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பினர்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டிற்கு அமைய சம்பவ இடங்களுக்கு விரைந்த நுகர்வோர் அதிகார சபையினர் பொது மக்களுக்கு சீராக எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும், இலாபம் கருதி பொது மக்களுக்கு எரிபொருள் வழங்காது பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபடும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.