தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

டிக்கோயா - சாஞ்சிமலை மேற்பிரிவு தோட்டத்தில் 100 இற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக 17 நாட்கள் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பு செய்து வந்த நிலையில் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

தோட்ட வெளிக்கள உத்தியோகத்தரை தோட்டத்தை விட்டு வெளியேற்றுமாறும், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிக்கும் தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

போராட்டத்தில் தொழிலாளர்கள் அத்தோட்ட நிர்வாகத்தினால் கவனிக்கப்படாத பல்வேறு விடயங்களை எழுதிய பதாதைகள் ஊடாக வெளிகொண்டு வந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அத்தோடு தோட்ட வெளிக்கள உத்தியோகத்தரை தோட்டத்தை விட்டு வெளியேற்றும் வரைக்கும் தாம் பணிக்கு திரும்பப்போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே தோட்ட நிர்வாகம், தொழிற்சங்கங்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் முன்வந்து இதற்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் இதன்போது கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.