போரால் பாதிக்கப்பட்ட பெண்களின் உண்மையான தகவல்களை பெறமுடியாத நிலை

Report Print Sumi in சமூகம்

வட மாகாணத்தில் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் போரால் பாதிக்கப்பட்ட பெண்களின் உண்மையான தகவல்களை பெறமுடியாத நிலை காணப்படுவதாக சர்வதேச பெண்கள் மாநாட்டு ஒருங்கமைப்பாளர் சரோஜா சிவசந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய அலுவலகத்தில் சர்வதேச பெண்கள் மாநாட்டு முன்னேற்பாடுகள் தொடர்பான ஊடகவியலளர் சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

யுத்தம் நிறைவடைந்த பின்னரான சூழலில் பெண்கள் வலுவூட்டலும் தலைமைத்துவமும் என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட பெண்கள், குடும்பங்கள், கணவனை, பிள்ளைகளை இழந்தவர்களின் வாழ்வாதார நிலைமைகளை ஆழமாக ஆய்வு செய்து அவர்களை வலுவூட்டு வதற்கான முன்மொழிவுகளை ஆய்வாளர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.

வட மாகாணத்தினை பொறுத்தவரையில் இராணுவ மயப்பட்ட பிரதேசங்களில் இன்றுவரை பெண்களின் நிலைமை தொடர்பில் உண்மையான தகவல்களை திரட்ட முடியவில்லை.

இந்த மாநாட்டின் ஊடாக எவ்வாறு உண்மையான தகவல்களை திரட்டுவது என பதிவு செய்யவுள்ளோம். இதன் ஊடாக சர்வதேச மட்டத்துக்கு உண்மையான தகவல்களை கொண்டு செல்லவுள்ளோம்.

இதேவேளை இந்த மாநாடு யாழ். பொதுநூலக மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 21, 22ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமையினால், சர்வதேச ரீதியில் பெண்கள், இந்த மாநாட்டில் கலந்து கொண்டு, பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான ஆய்வு அறிக்கைகளையும் சமர்ப்பிக்கவுள்ளனர்.

அந்த ஆய்வு அறிக்கையின் பிரகாரம், எதிர்காலத்தில் எமது பெண்களின் வாழ்;வில் பல மாற்றத்தினைக் கொண்டு வர முடியும் என குறிப்பிட்டுள்ளார்.