முள்ளிவாய்க்கால் நினைவு நாள்: யாழ். பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்த அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம்

Report Print Nesan Nesan in சமூகம்

முள்ளிவாய்க்கல் நினைவு நாளை அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து முள்ளிவாய்க்காலில் மே 18ஆம் திகதியை நினைவு கூறவுள்ளது.

இதற்கான முழு ஆதரவையும் வழங்கவுள்ளதாக அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த அவர்,

2009 மே 18ஆம் திகதி என்பது தமிழர்கள் வாழ்வில் என்றுமே நினைவில் இருந்து நீங்காத ஒரு நாள். அன்றைய நாள் தமிழர்களுடைய வாழ்க்கை வரலாற்றை புரட்டிப்போட்ட ஒரு நாள்.

அன்றைய பொழுது இன்றும் விடியாதபடி எத்தனையோ தமிழர்கள் இன்றும் சுயநினைவின்றி தவிக்கும் நாள். இதனை நினைவு கூரவேண்டியது தமிழர்களாகிய எங்கள் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

எமது போராட்டங்கள் அனைத்தும் தமிழ் மக்களுக்கான இணைந்த வடகிழக்கில் ஒரு நிலையான தீர்வினை பெறவேண்டும் என்பதே. அதற்காக அகிம்சை வழியிலும், ஆயுத வழியிலும் தமிழர்களுடைய போராட்டங்கள் நடைபெற்றன.

அந்த இரண்டு வழிப்போராட்டங்கள் மூலமும் நாம் பெரும்பான்மை சமூகத்திடம் இருந்து பெற்றுக்கொண்டது ஒன்றுமே இல்லை. மாறாக தமிழர்கள் தாயகப்பகுதிகளில் கொத்துக்கொத்தாக மடிந்ததே மீதமாகவுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு நாளை வடமாகாண சபை நினைவுகோருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அறியும் அதே நேரம், சமூக நோக்கம் கொண்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் அதனை நினைவுகோருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றார்கள்.

அதனை கருத்தில் கொண்டு எமது அமைப்பானது யாழ். பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவு நாளை அனுட்டிப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து வருகின்றோம்.

2009 மே 18 அந்த நாளில் எத்தனையோ தாய்மார்கள் தமது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டியபடியும், தாய் தன் குழந்தையை மார்பில் அணைத்தபடியும் தங்களது உயிர்களை மாய்த்துக்கொண்டார்கள்.

இவர்களது கனவுகள் அனைத்தும் தமிழருக்கான தீர்வு கிடைக்கும் என்றுதான் ஏங்கி மாண்டார்களே தவிர வேறு எந்த சுயநலப்போக்கும் இல்லை” எனவும் கூறினார்.