சித்தாண்டி உப தபாலகத்தை தரமுயர்த்து மாறு ஜனாதிபதிக்கு கடிதம்

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு சித்தாண்டியிலுள்ள உப தபாலகத்தினை தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இன்றைய தினம் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறி ரமண மகரிசி அறப்பணி நிலையத்தின் இலங்கைக்கிளையினரால், கிளையின் தலைவர் எம்.செல்லத்துரையின் கையொப்பமிடப்பட்டு குறித்த கடிதம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டிக் கிராமத்தில் அமைந்துள்ள இந்த உப தபாலகம் சித்தாண்டி ஒன்று முதல் 4 வட்டாங்களையுடையது. மாவடிவேம்பு, விநாயகர்கிராமம், இலுக்குப் பொத்தானை, பெரியவெட்டுவான், பெருமாவெளி, ஈரளக்குளம் உள்ளிட்ட பல்வேறு சுற்றயற் கிராமங்களின் மக்களும் இதனைப் பயன்படுத்துகின்றனர்.

தினமும் 500க்கு மேற்பட்டவர்கள் தபாலகத்திற்கு கடிதங்களை அனுப்புவதற்கும், தந்திகளை அனுப்புவதற்கும், 650க்கு மேற்பட்டவர்கள் 70 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்கள் மாதாந்த உதவிப் பணம் பெற்றுக் கொள்வதற்கு வருகை தருகின்றனர்.

எந்தவிதமான வசதிகளும் இன்றி வெயிலிலும் மழையிலும் இத் தபாலகத்திற்கு வருகை தரும் மக்கள் குடிப்பதற்கான தண்ணீர் வசதிகளோ, மலசல கூட வசதிகளோ இன்றி இன்னல்படுகின்றனர்.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாத மழைக்காலங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்படும் பிரதேசம் சித்தாண்டிப் பிரதேசமாகும். அதனால் இந்தத் தபாலகத்திற்கு நல்லதொரு இரண்டு மாடிக் கட்டடத்தினை அமைத்துத் தருவதுடன், மக்களது சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்தத் தபாலகத்தினை தரமுயர்த்தியும் தரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் பிரதிநிகள், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகாரங்கள் அமைச்சர் ஜனாப் ஹாலிம் மற்றும் தேசிய நல்லிணக்கப்பிரதி அமைச்சர் அலிசாகிர் மௌலானாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.