வடமாகாண தனியார் பேருந்துகள் எதிர்வரும் 18ஆம் திகதியின் பின்னர் பணிப்பகிஷ்கரிப்பில்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வட பிராந்திய தனியார் பேருந்துகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக வட பிராந்திய தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் உப தலைவர் கே.ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்றைய தினம் ஊடகங்களுக்கு வெளியிட்ட செய்தியில் மேலும் குறிப்பிடப்படுவதாவது,

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக எரிபொருள் விலையேற்றம் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்களால் இன்று நள்ளிரவு முதல் பணிபுறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்நிலையில், வடக்கு மாகாண சபையால் எதிர்வரும் 18ஆம் திகதி துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால் வடக்கின் 5 மாவட்டங்களின் பொதுமக்கள் அப்பகுதிக்கு சென்று வருவதை கருத்தில் கொண்டு வட பிராந்திய தனியார் பேருந்து சங்கம் இன்று போல் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு வரை வழமையாக தமது சேவைகளை வழங்குவது என தீர்மானித்துள்ளனர்.

இதன்படி வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிற்கும் இடையேயான சேவைகளும், உள்ளூர் சேவைகளும் எதிர்வரும் 18ஆம் திகதி வழமை போன்று நடைபெறும்.

எதிர்வரும் 18ஆம் திகதியும் தென்னிலங்கை தனியார் பேருந்துகளின் பணி பகிஷ்கரிப்பு தொடரும் பட்சத்தில் அவர்களோடு இணைந்து தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் முகமாக வடமாகாண எமது சங்கமும் போராட்டதில் இணைய உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.