மாடுகளை வெட்டுவதற்கு இந்த அனுமதிகள் இருந்தால் போதும்!

Report Print Sumi in சமூகம்

உரிய ஆவணங்களை சமர்ப்பித்து சட்ட ரீதியான அனுமதி பெற்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர் முன்னிலையில் மாடுகளை இறைச்சிக்காக வெட்ட உள்ளூராட்சி சட்டவிதிகளின் அடிப்படையில் அனுமதி உள்ளது என சாவகச்சேரி நகராட்சி மன்ற தவிசாளர் தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை சாவகச்சேரி நகரசபையின் கொல்களத்தில் அனுமதியின்றி சட்ட விரோதமாக 32 மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதாக செய்திகள் வெளியாகியதுடன் முகநூல்களிலும் பகிரப்பட்டிருந்தது.

அதே நேரம் நகரசபை உறுப்பினர் ஒருவரும் தனது சகாக்களுடன் கொல்களத்துக்கு சென்று நிலமைகளை அவதானித்துள்ளார். இதன்போது குறித்த உறுப்பினருடன் சென்றவர்கள் கொல்கலத்தில் உள்ளவர்களோடு முரண்பட்டதோடு நகர சபைத் தலைவரையும் அவதூறாகப் பேசியுள்ளார்.

இவ்விடயங்கள் தொடர்பாக நகராட்சி மன்றத் தலைவர் சிவமங்கை இராமநாதனிடம் வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். உள்ளூராட்சி சட்டங்களிலே ஒரு நாளைக்கு எத்தனை மாடுகள் வெட்ட அனுமதிக்கமுடியும் என வரையறுக்கப்படவில்லை.

மாடு வெட்டுவதற்காக ஒவ்வொரு மாட்டுக்கும் தனித்தனியாக ஆவணங்களை சமர்ப்பித்து சட்டரீதியான அனுமதியைப் பெற்று பொதுச்சுகாதார பரிசோதகர் முன்னிலையில் வெட்ட முடியும்.

இறைச்சிக்காக மாடு ஒன்றினை வெட்டுவதற்கான அனுமதிக்காக மாட்டினை விற்பனை செய்த உரிமையாளரின் சம்மதக்கடிதம், சமாதான நீதிவான் ஒருவரால் உறுதிப்படுத்தி அவரது இறப்பர் முத்திரை பதிக்கப்பட்டிருக்க வேண்டும், மற்றும் கால்நடை வைத்தியசாலையால் இடப்பட்ட இலக்கத் தோடு மாட்டின் காதில் காணப்படவேண்டும்.

இவ்வாறான ஆவணங்களோடு உரிய முறையில் நகராட்சி மன்றத்தில் அனுமதிக்கு விண்ணப்பிக்கப்படுகின்ற போதே அனுமதி வழங்கப்படுகின்றது.

அதனடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என நகராட்சி மன்றத் தலைவர் சிவமங்கை இராமநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக கொல்கலத்தில் மேற்பார்வைப் பணியில் இருந்த பொதுச்சுகாதாரப் பரிசோதகரிடம் வினவியபோது இன்று 20 மாடுகளை மட்டும் இறைச்சிக்காக வெட்டுவதற்கு நகராட்சி மன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 20 மாடுகள் உண்பதற்கு உகந்ததா என பரிசோதிக்கப்பட்டு என் முன்னிலையில் வெட்டப்பட்டுள்ளது எனத்தெரிவித்தார்.