புகையிரத பாதையில் மண் சரிவு! போக்குவரத்து பாதிப்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்

பதுளை கொழும்பு பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில் தலவாக்கலை புகையிரத நிலையத்தின் சுரங்கப்பகுதிக்கு அருகாமையில், 13/115வது மைல் கட்டைப்பகுதியில் இன்று மாலை 3 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் சுமார் அரை மணித்தியாலம் பாதிப்படைந்தன.

இதன் காரணமாக பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் ரயில் தலவாக்கலை புகையிரத நிலையத்தில் சுமார் அரை மணித்தியாலம் தரித்து வைக்கப்பட்டது.

அதன்பின் பாதிப்பேற்பட்ட ரயில் பாதையை சீர்செய்யும் பணிகளில் ரயில் நிலைய ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டன.

தற்பொழுது ரயில் பாதையை சீர் செய்துள்ளதோடு, மலையகத்திற்கான புகையிரத சேவை வழமைக்கு மாறியுள்ளதாக தலவாக்கலை புகையிரத நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இன்று மலையக பகுதிகளில் பெய்த தொடர்ச்சியான மழை காரணமாகவே இந்த புகையிரத பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

அதேவேளை மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.