மீன்பிடிக்கான நியதிச் சட்டம் ஒன்றை உருவாக்காமல் எதையும் செய்ய முடியாது: சிவனேசன்

Report Print Sumi in சமூகம்

வடக்கு மாகாண சபைக்கும் கொழும்பு அரசுக்கும் கடல் வளம் தொடர்பாக இணைந்த அதிகாரங்கள் உள்ளன. இந்த விடயம் 13ஆவது திருத்தத் சட்டத்திலும் உள்ளது.

ஆனால் வடக்கு மாகாண சபையில் கடல் வளம் மற்றும் மீன்பிடிக்கான நியதிச் சட்டம் ஒன்றை உருவாக்காத காரணத்தினால் எம்மால் எதையும் செய்ய முடியால் இருக்கின்றது என்பதை ஒத்துக்கொள்கிறேன் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் சிவனேசன் தெரிவித்துள்ளார்.

மீன் தொழிலின் தற்கால நிலைமைகள் மற்றும் மீனவ வளங்கள் முகாமைத்துவ தொடர்பான வலய மட்ட மாநாடு யாழ்ப்பாண ரில்கோ விருந்தினர் விடுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தின் கடல் வளங்களை பறவைக் சரணாலயம் என்ற பெயரில் தென்னிலங்கை அரசு சூறையாடி வருகின்றது. தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறலும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

அவர்களின் அத்துமீறலைத் தடுப்பதற்கு உரிய சட்ட முறை இல்லாததால் இன்று வரை அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாது உள்ளது.

எமது கடல் வளத்தில் அத்துமீறும் தென்னிலங்கை மீனவர்களை நாம் பொலிஸாரிடம் ஒப்படைத்தாலும் அவர்கள் பக்கச் சார்பாக செயற்படுவதுடன் அதற்கான சட்ட ஏற்பாடுகளும் இல்லை என கை விரிக்கின்றனர்.

இவ்வாறு அத்துமீறும் தென்னிலங்கை மீனவர்கள் உளவு இயந்திரங்களைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதனால் எமது கடல் வளம் அழிவதுடன் எமது மக்களும் பாதிப்படைகின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக நாட்டின் சுற்றாடல் துறை அமைச்சரும் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தேன். ஆனால் அவரும் இந்த விடயத்தில் எம் மீது கரிசனை காட்ட வில்லை.

மேலும், இவ்வாறான கையறு நிலைக்கு மாகாண சபையும் எமக்கான நியதிச் சட்டம் ஒன்றை உருவாக்காததும் ஒரு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.