இராணுவ புலனாய்வாளர்களினால் யாழ். நீதிமன்றுக்கு வெளியே அசாதாரண நிலை

Report Print Murali Murali in சமூகம்

யாழ். மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு மனுவினை தாக்கல் செய்துள்ள மனுதார்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவ புலனாய்வு பிரிவினை சேர்ந்தவர்கள் நடந்துகொண்டுள்ளனர்.

யாழ். நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனு மீதான விசாரணைகள் இன்று இடம்பெற்றது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைகள் முடிவடைந்து, மனுதார்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் நீதிமன்றுக்கு வெளியில் வந்த போது இராணுவ புலனாய்வாளர்கள் அவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், நீண்ட நேரமாக மனுதார்கள் நீதிமன்ற வளாகத்தினை விட்டு வெளியேறாதிருந்ததுடன், இது குறித்து தமது சட்டத்தரணிகளுக்கும் அறிவித்திருந்தனர்.

இராணுவ புலனாய்வாளர்களின் இந்த நடவடிக்கையால் அந்த பகுதியில் ஒருவித அசாதாரண நிலை ஏற்பட்டிருந்ததாக மனுதார்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இராணுவ புலனாய்வாளர்கள் அந்த இடத்திலிருந்து வெளியேறிய பின்னர் மனுதார்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் நீதிமன்றை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.