வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கும் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் பயணிகளுக்கு சிக்கல்!

Report Print Vethu Vethu in சமூகம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு செயற்பாடுகள் முடங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் தொழிற்சங்க சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சேவைகளின் தரத்தை அதிகரிப்பதற்காக 3 கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சேவை அரசியலமைப்பு ஒன்றிற்கு அனுமதி வழங்குதல், வழக்கு தாக்கல் செய்யும் பிரிவை மீண்டும் நிறுவுதல் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்காக தங்கள் அதிகாரிகளை இணைத்து கொள்வது ஆகிய மூன்று விடயங்களை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உயர் அதிகாரிகள் கடந்த 6 மாதங்களாக கோரிக்கை விடுத்த போதும், இதுவரை யாரும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் இன்று பிற்பகல் 12 மணிக்கு மௌன போராட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ளதுடன், இன்று நள்ளிரவு முதல் பணி பகிஷ்கரிப்பு ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்ததாகவும், இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அருண கனுகல குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிட்ட அமைதி போராட்டம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்னால் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படும் பணிபகிஷ்கரிப்பு காரணமாக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களின் தினசரி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளனர்.

தங்கள் அதிகாரிகள் குறைந்த வசதியின் கீழ் செயற்படுகின்றனர். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தங்கள் கடமைக்கு அப்பால் சென்று சேவை வழங்கி வருகின்றனர். இன்று மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விமான நிலையத்தில் சில தாமதங்கள் மற்றும் விமான பயணிகள் நிராகரிப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.