பணிப்பகிஷ்கரிப்பால் நாடளாவிய ரீதியில் அவதியுறும் நோயாளர்கள்

Report Print Thirumal Thirumal in சமூகம்

நுவரெலியா

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளமையினால், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் இன்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சிங்கப்பூருடன் இலங்கை அரசு செய்துகொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

அந்த வகையில் மலையகத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று காலை சில வைத்தியர்கள் கடமையில் ஈடுப்பட்டிருந்தாலும், சில வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டிருந்தனர்.

இதனால் இங்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஹட்டன் - டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு தூர பிரதேசங்களிலிருந்து வருகை தந்த தோட்ட தொழிலாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

வெளிநோயளர் பிரிவு மற்றும் கிளினிக் முழுமையாக செயழிழந்ததனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

எனினும் நோயாளர்களின் நிலைமையை கருத்திற்கொண்டு அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் இயங்கியுள்ளது.

வவுனியா

வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று ஒரு நாள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக நடவடிக்கைக்கு அரசாங்கம் கையொப்பமிட்டதற்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பானது வவுனியாவிலும் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் நோயாளர்கள் பலரும் விரக்தியுடனும் ஏமாற்றத்துடனும் திரும்பிச்செல்வதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் விடுதிச் சேவை மட்டுமே இன்றுதொழிற்படுகின்றதுடன், ஏனைய மருத்துவ சேவைகள் இடம்பெறவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.

வவுனியா செய்திகள் - சதீஸ்

கிளிநொச்சி

கிளிநொச்சி வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக மாதாந்த மருத்துவ பரிசோதனை மற்றும் நோய்களுக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

மாதாந்த சிகிச்சைக்காக வருகை தந்தவர்களுக்கு மீண்டும் இறுதியாக வழங்கப்பட்ட மருந்துகள் வழங்கப்பட்டதாகவும், அடுத்த மாதத்திற்கான திகதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அவசர சிகிச்சை பிரிவு தவிர்ந்த ஏனைய செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளன.

கிளிநொச்சி செய்திகள் - யது