கொழும்பு மாநகர சபையில் சாப்பாட்டுக்காக பெருந்தொகை பணம்! வெளியான அதிர்ச்சித் தகவல்

Report Print Jeslin Jeslin in சமூகம்

கொழும்பு மாநகர சபையின் முதலாவது பொதுச் சபை அமர்வில் உணவுக்காக பதினான்கு லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் முதலாவது பொதுச்சபை அமர்வு கடந்த மாதம் 5ஆம் திகதி புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது காலை நேர உணவுக்காக 155,025 ரூபாவும், பகல் உணவுக்காக 990,000 ரூபாவும், மாலை சிற்றுண்டிக்காக 121,800 ரூபாவும், இரவு உணவுக்காக 150,000 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது என கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் ஒருவர் தனது முகநூல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் முதலாவது பொதுச்சபை அமர்வின் உணவுக்காக 14 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், அந்த தொகையானது கொழும்பு மாநகர சபையில் அங்கத்துவம் வகிக்கும் 119 உறுப்பினர்களின் ஒரு மாதக் கொடுப்பனவின் 35 சதவீதம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

119 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் கொழும்பு மாநகர சபையில் காலை உணவு 500 பேருக்கும், மதிய உணவு 500 பேருக்கும், மாலை சிற்றுண்டி 400 பேருக்கும், இரவு உணவு 250 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமல்லாமல் மதிய உணவுக்காக ஐந்து இடங்களில் விலைமனுக்கள் கோரப்பட்ட நிலைமையில் மூன்று விலைமனுக்களின் பிரதிகள் மாத்திரமே உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதியறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அதி சொகுசு ஹோட்டல் ஊடாக மதிய போசனத்திற்கு ரூபா 1980 அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்ட விலை மனுக்கோரலின் பிரதி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதியறிக்கையில் இணைக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், பொதுமக்களின் பணம் இவ்வாறு வீண் விரயமாக்கப்படுவது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதுடன், பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்கள் பிரதிநிதிகளின் அசமந்தப்போக்கு கண்டிக்கத்தக்கது என பொதுமக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.