பீடியை வைத்து மாணவர்கள் செய்த மோசமான செயல்

Report Print Shalini in சமூகம்

திருகோணமலை - ரொட்டவெவ பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு பீடியை விற்பனை செய்த கடை உரிமையாளரை பொலிஸார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலை - ரொட்டவெவ பகுதியிலுள்ள வயோதிபர் ஒருவரின் கடையொன்றில் 10 ரூபாய்க்கு பீடி வாங்கிச் சென்ற 13 வயதுடைய மாணவர்கள், பாடசாலை வளாகத்தில் வைத்து அந்த பீடியை குடித்துக்கொண்டிருக்கும் போது பொலிஸாரிடம் வசமாக சிக்கியுள்ளனர்.

மாணவர்கள் இருவரும் பீடியை வாங்கிக்கொண்டு சென்று கஞ்சாவை பீடிக்குள் கலந்து குடித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மாணவர்களிடம் பீடி எங்கிருந்து பெறப்பட்டது என விசாரணை செய்த போது வயோதிபரின் கடையில் வாங்கியதாக மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து கடை உரிமையாளரை ரொட்டவெவ பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து சிறுவர்களுக்கு இனிவரும் காலங்களில் பீடி மற்றும் சிகரெட் விற்றமை தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர்.

இதேவேளை மாணவர்களும் கடுமையாக எச்சரிக்கப்பட்டு பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.