படையினரின் தியாகத்தை குறுகிய நோக்கங்களுக்கு பயன்படுத்தக் கூடாது

Report Print Steephen Steephen in சமூகம்

நாட்டு மக்கள் தற்போது அனுபவித்து வரும் சுதந்திரத்திற்காக 28 ஆயிரத்து 589 படையினர் தமது உயிர்களை தியாகம் செய்துள்ளதாக இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய போர் வீரர்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

அனைத்து இலங்கையர்களும் தற்போது அனுபவித்து வரும் சுதந்திரத்திற்காக 23 ஆயிரத்து 962 இராணுவத்தினர், ஆயிரத்து 160 கடற்படையினர், 443 விமானப்படையினர், 2 ஆயிரத்து 568 பொலிஸார் மற்றும் 456 சிவில் பாதுகாப்பு படையினர் தமது உயிர்களை தியாகம் செய்துள்ளனர்.

இவ்வாறு உயிர் தியாகங்களை செய்து உரித்தாக்கிக் கொண்ட சுதந்திரத்தை குறுகிய நோக்கங்கள் மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்தக் கூடாது எனவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

போரில் உயிரிழந்த அனைத்து படையினரையும் நினைவுக்கூரும் வகையில் விசேட அனுஷ்டிப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அனைத்து படைப்பிரிவு தலைமையங்களிலும் இராணுவத் தளபதி தலைமையில் சமய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 19 ஆம் திகதி படையினர் நினைவிடத்தில் தேசிய நினைவுதின நிகழ்வுகள் நடைபெறும். அத்துடன் களனி ரஜமஹா விகாரையில் விளக்கு பூஜையும் நடைபெறவுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.