அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பகுதியில் நடக்கும் அட்டகாசத்திற்கு ஏற்பட்ட நிலை

Report Print Nesan Nesan in சமூகம்

நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை, வழுக்கமடு பாலத்தை அண்டிய பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கனரக இயந்திரத்தைப் பயன்படுத்தி குறித்த பகுதியில் இவ்வாறு மணல் அகழ்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பிரதேச மக்கள் குறிப்பிடுகையில்,

எமது பிரதேசத்தில் கனரக இயந்திரத்தைப் பயன்படுத்தி மண் வளத்தை சூறையாடி தனியார் இலாபம் பெற, எமது வளத்தை நாம் விட்டுக்கொடுக்க முடியாது.

இதற்கு எமது பிரதேச சபை, பிரதேச செயலக அனுமதி இன்றி சுற்றுசூழல் அமைப்பு தனியாருக்கு அனுமதி கொடுக்கின்றனர்.

எனினும் எமது ஆற்றின் மண் வளம் அகழப்பட்டு, மழைக்காலங்களில் அப்பகுதியில் வெள்ள நீர் புகுந்து நாம் அவதிப்படுவது அனுமதி வழங்கும் அதிகாரிகளுக்குப் புரிவதில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், வடிச்சல் வாய்க்காலில் மண்ணகழ்வு நடைபெற்ற இடத்திற்கு பிரதேச சபை தவிசாளர் கலையரசன், பிரதேச செயலாளர் சோ. ரங்கநாதன், உதவி செயலாளர் நவநீதன், சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நஜீப், பிரதேச சபை உறுப்பினர் சுதர்சன் மற்றும் பொதுமக்கள் என பலர் சென்று குறித்த மணல் அகழ்வை தற்காலிகமாக தடுத்து நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.