அம்புலன்ஸ் வண்டி சாரதி தாக்கப்பட்டமையை கண்டித்து பணிப்பகிஸ்கரிப்பு

Report Print Ashik in சமூகம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் கண்டன போராட்டம் மற்றும் பணிப்பகிஸ்கரிப்பு இடம் பெற்றுள்ளது.

மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய பண்டிவிருச்சான் பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக அம்புலான்ஸ் வண்டி சாரதியாக கடமையாற்றும் ராஜேந்திரன் சற்குனராசா (வயது-37) என்பவரை கடந்த 14 ஆம் திகதி மாலை கடமை நேரத்தில் வைத்தியசாலை வளாகத்தில் வைத்து இனம் தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த சம்பவத்தை கண்டித்து மன்னார் மாவட்ட அரச சுகாதார சேவைகள் சாரதிகள் சங்கம் மற்றும் சிறிலங்கா ஜனரஞ்சக சுகாதார சேவைகள் சங்கம் ஆகியவை இணைந்து குறித்த ஒரு மணி நேர அடையாள பணிப்பகிஸ்கரிப்பையும், எதிர்ப்பையும் மேற்கொண்டனர்.

இன்று காலை 8 மணி தொடக்கம் 9 மணி வரையுமான சுமார் ஒரு மணித்தியாலம் மன்னார் மாவட்ட அரச சுகாதார சேவைகள் சாரதிகள் சங்கம் மற்றும் சிறிலங்கா ஜனரஞ்சக சுகாதார சேவைகள் சங்கம் அகியவற்றின் பிரதி நிதிகள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் ஒன்று கூடி பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தினர்.

பெரிய பண்டிவிருச்சான் பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக அம்புலான்ஸ் வண்டி சாரதியாக கடமையாற்றும் ராஜேந்திரன் சற்குனராசா (வயது-37) என்பவரை கடந்த 14 ஆம் திகதி மாலை வைத்தியசாலை வளாகத்தில் வைத்து அவர் கடமையில் இருந்த போது மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இதன் போது தாக்குதலுக்கு உள்ளான குறித்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

எனவே குறித்த அம்புலன்ஸ் வண்டி சாரதி மீது தாக்குதல்களை மேற்கொண்ட குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், குறிப்பாக கடமை நேரத்தில் அரச பணியாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் கண்டிக்கப்பட வேண்டியதெனவும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும், அரச பணியாளர்கள் கடமை நேரத்தில் மரியாதையாக பேணப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.