கம்போடியாவில் இடம்பெற்ற உலகத்தமிழ் மாநாடு

Report Print Dias Dias in சமூகம்

கம்போடியா, சியாம் ரீப் நகரில் நேற்று முன்தினம் தமிழர் பண்பாட்டைப் வெளிப்படுத்தும் வகையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றுள்ளது.

கம்போடிய பாரம்பரிய நடனத்துடன், கம்போடிய அரச பிரதிநிதிகளின் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

ஈழத்தமிழ் மன்றமான சைவநெறிக்கூடம் இம் மாநாட்டில் பங்கெடுத்து ஈழத்தமிழர் தனித்துவத்தையும், தமது தமிழ் வழிபாட்டுத் தீர்மான நோக்கத்தினையும் வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் பேர்ன் நகரில் அமையவிருக்கும் தமிழர் களறி எனும் நூலகம் மற்றும் ஆவணக்காப்பகம் திட்டம் தொடர்பில் இதன்போது தெளிவாக விளக்கப்பட்டுள்ளதுடன் மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் குறித்த திட்டம் தொடர்பான பதிப்பு ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

உலகெங்கினும் தமிழர்கள் வழிபடும் திருக்கோவில் முழுவதும் கருவறையில் செந்தமிழ்த் திருமறை ஒலிக்க இங்கு கூடியுள்ள தமிழார்வலர்கள் முயற்சிக்க வேண்டும் என சைவ நெறிக்கூடத்தினால் இதன்போது வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

சைவநெறிக்கூடத்தின் சுவிற்சர்லாந்து பேர்ன் நடுவத்தின் சார்பில் தில்லையம்பலம் சிவகீர்த்தி, ஐக்கியராச்சியக் கிளையின் சார்பில் ஸ்ரீரஞ்சன் ஆகியோர் பங்கெடுத்து கீழ்காணும் பொருளில் உரையாற்றியிருந்தனர்.

சைவநெறிக்கூடத்தைப் பொறுத்தவரை சைவமும் தமிழும் எமது இரு கண்கள். 'தமிழா வழிபடு, தமிழில் வழிபடு" எனும் மகுடத்தை தமிழ்வழிபாட்டு அறவழிப் போராளிகளுடன் இணைந்து உலகம் முழுவதும் சைவநெறிக்கூடம் முழங்கி வருகிறது.

தமிழ் வழிபாட்டுப் போராட்டத்தைத்தாண்டி, தமிழ் இனத்தின் வரலாற்றை ஆவணப்படுத்த 'தமிழர் களறி" எனும் திட்டத்தையும் இம்மன்றம் சுவிற்சர்லாந்து நாட்டில் தொடங்கி உள்ளது.

உலகில் தமிழர் அடையாளங்கள், வரலாற்றுச் சான்றுகள் வெளிவரும் போதெல்லாம், அவற்றை அழித்துவிடுவதில் பல்வேறு தரப்புக்கள் முனைப்புக்காட்டுகின்றன. இவற்றையும் மீறி வெளிவருபவை மிகச் சொற்ப விடயங்களே.

எம்மினத்தின் வரலாறு உரிய சான்றுகளுடன் பேணப்பட்டு, எதிர்கால சந்ததியின் கைகளில் கையளிக்கப்படாவிடத்து, கரைந்துபோன இனங்களின் வரிசையில் பெருமைமிக்க எம்மினமும் சேர்ந்துகொள்ளும் என்பது துயரமான உண்மையே!

தமிழின வரலாற்றை அழிக்க பலரும் காலம் காலமாக மேற்கொண்டுவரும் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் நாமறிந்தவையே. வாழ்விடப் பறிப்பு, தொல்லியல் சான்றுகள் அழிப்பு, நூலக எரிப்பு என இவை தொடர்ந்தவண்ணமே உள்ளன எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

ஒவ்வொரு தமிழரும் தமிழர் களறிக்கு நல்லாதரவு அளிக்க உள்ளன்புடனும் உரிமையுடனும் வேண்டுகோள் வைக்கப்பட்டது. வாய்ப்புள்ள அமைப்புக்கள் யாவும்,தமிழர் வரலாற்றை கல்வியல்ரீதியில் உரிய சான்றுடன் நிறுவி, ஆவணப்படுத்தி அடுத்த இளந்தமிழ்சமூகம் பயன்பெறும் வகையில் கையளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இன்று கம்போடிய மண்ணில் தமிழர்கள் நாம் ஒரு இனமாக, தமிழராகப் பெருமை அடைகிறோம். இப்பெருமை உணர்வை உலகெங்கினும் உள்ள இளந்தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கவேண்டும் என்பது ஈழத்தமிழர்களது அவா ஆகும்.

தமிழன் முப்பெரும் பேரரசுகள் கொண்டு, முடிசூட்டி, உலகாண்டு வாழ்ந்தானா என்பதை, எமது இளஞ்சமூகம் இன்று கேள்வியுடன் பார்க்கிறது. பகுறொளி ஆறும் பன்மலை அடுக்கம் அடுத்த எம் தலைமுறை தேடுமா? என்பது இன்றைய எமது செயற்பாட்டில் மட்டுமே அமையும் எனவும் சைவநெறிக்கூடம் நம்புகிறது என எடுத்துரைக்கப்பட்டது.

இம் மாநாடு உலகில் தமிழ் அரசுகள் செழிப்புடன் இருந்த காலத்தை எம் கண்முன்கொண்டு வருகிறது. நாளை தமிழர் நாம் அறிவால், செல்வத்தால், வீரத்தால் மீண்டும் தலைநிமிர்வோமா எனும் கேள்விக்கும் இங்கு குழுமி இருக்கும் அறிவுசார்ந்த தமிழ்ச்சமூகத்திடமே பதில் உண்டு என எண்ணுகிறோம் என உரை அமைந்தது.

நிமிர்வு கொண்ட எம் தமிழினத்தை இயற்கையும், இரண்டகமும் மட்டுமல்ல, இடையில் வந்த சமூக ஏற்றத் தாழ்வுகளும், சாதியமும்கூட வலுவிழக்கச் செய்துள்ளது.

இன்று அங்கோவார் மண்ணில் நந்தி வர்மன் விட்டுச் சென்ற அடையாளத்தை பெருமிதத்தோடும் பல கேள்விகளுடனும், வியப்புடனும் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் நோக்குகிறோம்.

உலகத் தமிழர் மாநாட்டுப் பங்காளர்கள் அனைவரும், தமிழர் வரலாற்றை நிலைநிறுத்தி, எதிர்கால எம் தமிழினத்தின் இருப்பிற்கு வலுச்சேர்க்கும், அனைத்து வகையான செயற்பாடுகளிலும் எம்மை ஈடுபடுத்தி, தமிழினத்தின் சிறப்பிற்கு உழைக்க இங்கு உறுதி கொள்ள வேண்டப்பட்டது.

சிவகீர்த்தி தனது உரையின் நிறைவில் ஒரு இனத்திற்கு வழிகாட்டி நிற்பது அதன் வரலாறேயாகும். அதனால் தான் ஈழத்தின் தேசத் தலைமகன் 'வரலாறு எனது வழிகாட்டி" என்றுரைத்தார்.

ஒரு இனத்தின் உண்மையான வரலாறு அதன் சந்ததிகளுக்கு சரிவர எடுத்துச்செல்லப்படவில்லையாயின், அந்த இனம் இருப்பிழந்து காலவோட்டத்தில் கரைந்துபோய்விடும்!

ஆகவே உங்கள் அனைவர் பணிகளையும் உள்ளத்தில் நிறுத்தி, தமிழ்ப்பணியாற்றும் அனைவரது திருவடிகளையும் பற்றி நாங்கள் உங்களிடத்தில் தமிழில் வழிபடவும், தமிழ் வரலாற்றை ஆவணப்படுத்தவும் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இந்நாளுக்காக உழைத்த அனைத்து உறவுகளுக்கும், பெருந்தகைகளுக்கும் எமது அன்பினைப் பகிர்வதோடு மீண்டும் நன்றியை நவில்கிறோம் என நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், 40 நாடுகளின் கடவுச்சீட்டை கொண்ட 152 நாடுகளில் வாழும் தமிழர்கள் ஒன்றுகூடி நடத்திய இம்மாநாட்டில், இனம், மொழி, வரலாறு, பண்பாடு, சமயம் எனப் பல்துறைகளும் பேசப்பட்டது இம்மாநாட்டின் பெருமையாக அமைந்தது என குறிப்பிடப்படுகின்றது.