வடக்கில் தொடரும் சமூக விரோதச் செயல்கள்!

Report Print Samy in சமூகம்

வடக்கில் முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக வடபகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நிம்மதியாக வாழ முடியாத சூழலே உருவாகி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

வாள்வெட்டுக்களின் அட்டகாசங்கள் வழிப்பறி கொள்ளையர்களின் அச்சுறுத்தல்கள் போதைவஸ்துக்கு அடிமையான இளைஞர்களின் சமூக விரோதச் செயல்கள் என பல்வேறு குற்றச் செயல்கள் அன்றாடம் அரங்கேறி வருவதாக தமிழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவை அனைத்துக்கும் மேலாக வவுனியாவில் இடம்பெற்ற கடத்தல் சம்பவம் ஒன்று பெரும் பீதியை கிளப்பியுள்ளது. வீட்டில் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த எட்டு மாதக் ஆண்குழந்தை ஒன்று வானில் வந்த குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளது.

வவுனியா குட்ஷெட் வீதி முதலாம்ஹ ஒழுங்கையில் வியாழனன்று அதிகாலை இரண்டு மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. லண்டனில் உள்ள கணவனே இந்தக் கடத்தலை மேற்கொண்டுள்ளதாக அவரது மனைவி பொலிஸில் முறையிட்டுள்ளார்.

இது ஒரு குடும்பப் பிரச்சினை என்பதற்கு அப்பால் சமூக ரீதியில் அதன் தாக்கம் குறித்து சிந்திப்பது அவசியமாகின்றது. ஒரு சிலர் பணபலத்தால் எதையும் செய்ய முடியும் என்ற மமதையில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எவ்வாறிருப்பினும் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த எட்டுமாதக் குழந்தை ஒன்று வான் ஒன்றில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்ட விடயம் மிகவும் கொடூரமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய சக்திகள் பணத்துக்காகவும் இதர சலுகைகளுக்காகவும் எதையும் எப்பொழுதம் செய்யும் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட கடத்தல் காரர்களை பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் துரிதமாகக் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன்னிறுத்த வேண்டியது அவர்களின் பொறுப்பாகும்.

இதேவேளை வடக்கில் இடம்பெறும் அதிகளவிலான குற்றச்செயல்களுக்கு வெளிநாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்படும் பணமே காரணம் என பொதுவான குற்றச்சாட்டொன்று இருந்து வருகின்றது.

குறிப்பாக வெளிநாடுகளில் மிகுந்த கஷ்டங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் உழைக்கும் பணத்தை தங்கள் உறவினர்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கின்றனர். எனினும் பெரும்பாலான இளைஞர்கள் தமது சொகுசு வாழ்க்கைக்கு அந்தப் பணத்தை வாரி இறைப்பதுடன் சர்வசாதாரணமாக குற்றச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர் என பெரும்பாலான வடபகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அநேகமான இளைஞர், யுவதிகள் இன்று புதிய புதிய மோட்டார் சைக்கிள்களில் பவனி வருவதுடன் மது மற்றும் போதைவஸ்துக்கு அடிமையாவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பெற்றோர் பலர் சொல்லொண்ணா துன்பங்களுக்கும் கஷ்டங்களுக்கும் ஆளாகியுள்ளனர்.

வளர்ந்த பிள்ளைகளை எவ்வாறு நல்வழிப்படுத்துவது சரியான பாதையில் அவர்களை இட்டுச் செல்வது என்ற மனப்போராட்டங்களுக்கும் ஆளாகியுள்ளனர்.

விரும்பியோ விரும்பாமலோ தமிழீழ விடுதலைப் புலிகளின் காலகட்டத்தில் யுத்தம் நிலவிய போதிலும் சட்டவிரோத செயற்பாடுகள் கட்டுக்கடங்கிய நிலையிலேயே காணப்பட்டன.

புலிகளின் கட்டுப்பாடுகள் காரணமாக இளைஞர், யுவதிகள் தன்னிச்சையான செயற்பாடுகளில் ஈடுபட பெரிதும் தயங்கினர். குறிப்பாக வாள்வெட்டுகள், கோஷ்டி சண்டைகள், போதைவஸ்து வியாபாரம் என்பன இடம்டபெற்றமைக்கான சான்றுகள் இல்லையென்றே கூறலாம்.

எனினும் வடக்கில் இன்று இவையனைத்தும் சர்வசாதாரணமாக காணப்படுகின்றன. நாட்டுக்குள் கேரள கஞ்சா கடத்தி வரப்படுவதற்கான பிரதான மார்க்கமாக வடபகுதி இருந்து வருவது மிகவும் கவலைக்கும் வேதனைக்கும் உரிய செயலாகும்.

குறிப்பாக தலைமன்னார் மார்க்கமாக வந்தடையும் கேரள கஞ்சா அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்டு இதர பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் கடந்த காலங்களில் பெருந்தொகையான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. அதுமாத்திரமன்றி கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான கஞ்சா மூட்டைகள் கடலில் கைவிடப்பட்ட நிலையில் தலைமன்னார் பகுதியில் கரையொதுங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதனிடையே யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கல்லூரிகளுக்கு அண்மையில் போதைப்பொருட்கள் போதை மாத்திரைகள் என்பன விற்பனை செய்யப்படுவதாகவும் இதற்கு உயர்வகுப்பு மாணவர்கள் பலர் அடிமைகளாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

கொழும்பிலிருந்தும் வடபகுதிக்குச் சென்றுள்ள குழுவினரே இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

அதுமாத்திரமன்றி இதனைக் கட்டுப்படுத்த பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் தயங்குவதாகவும் தமக்கு எதிராக மாணவர்கள் செயற்படுவார்கள் என்ற அச்சமே அதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு கிழக்கில் மாணவர்களை குறிவைத்து இத்தகைய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் அதிகரித்தே காணப்படுகின்றது.

பிரதானமாக இளம் வயதினர் மத்தியில் அதிகளவில் பணப்புழக்கம் உள்ளமை இத்தகைய சமூக விரோத செயற்பாடுகளுக்கு துணை போவதாக அமைந்துள்ளது. எனவே பெற்றோர் வயது வந்த தமது பிள்ளைகள் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் இருப்பது அவசியமாகும்.

அவர்களின் நடவடிக்கைகள், நண்பர்களின் சேர்க்கை தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவது தீய வழியில் அவர்கள் செல்லாதிருப்பதனை உறுதிசெய்யக் கூடியதாக இருக்கும்.

வடபகுதியைப் பொறுத்தமட்டில் நாட்டின் இதர பகுதிகளில் இல்லாத அளவுக்கு பெரும் எண்ணிக்கையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதுடன் சகல பிரதேசங்களிலும் பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இருந்த போதிலும் சமூக விரோத செயற்பாடுகள் எந்தவகையிலும் குறைந்தபாடில்லை. சாதாரணமாக பெண்கள் வீதியில் செல்வதற்கு கூட அஞ்சும் நிலைமையே காணப்படுகின்றது.

இவ்வாறான போக்குகளை மாற்றியமைத்து மக்களின் உண்மையான பாதுகாப்பை உறுதிசெய்வது பாதுகாப்புக்கு பொறுப்பானவர்களின் பிரதான கடமையாகும்.

எவ்வாறெனினும் குற்றச்செயல்கள் தொடர்பாக பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறையிட்டால் அவை உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதில்லை எனவும் வெறுமனே எந்தவித கரிசனையும் இன்றி பொலிஸார் நடந்து கொள்வதாகவும் முறைப்பாட்டாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக பெரும்பாலானவர்கள் பொலிஸ் நிலையங்களை நாடுவதை தவிர்த்து வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.

வடக்கில் தொடரும் இத்தகைய சமூக விரோதச் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் மற்றும் பொதுர்மக்கள் அரசியல்வாதிகள் என சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும்.

வெறுமனே ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்றால் மாத்திரம் அரசியல்வாதிகள் அதுதொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கையிட்டு தங்கள் பிரசன்னத்தைக் காட்டிவிட்டு பின்னர் கைவிடும் போக்குகளையே காணமுடிகின்றது.

குறைந்தபட்சம் அரசியல்வாதிகள் சமூகத்தின் நலனை கருத்தில் கொண்டு மேலும் தமது பதவிச் சண்டைகளுக்கும் கதிரைச் சண்டைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து சமூகத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் தம்மாலான பங்களிப்பை செய்ய முன்வர வேண்டும்.

வடக்கில் யுத்தம் முடிவுக்கு வந்ததே தவிர இதர விவகாரங்கள் எதுவும் இதுவரை முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை.

தொடர்ந்தும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்தவர்களாகவே இருந்து வருகின்றனர். எனவே அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் வடக்கில் தொடரும் இத்தகைய சமூக விரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரையில் தம்மாலான பங்களிப்பை செய்ய முன்வர வேண்டும்.

மாறாக குற்றச் செயல்கள் அதிகரிக்குமேயானால் இறுதியில் வடபகுதி நிலைமை மோசமடைவதுடன் அச்சத்துக்கு மத்தியிலேயே மக்கள் வாழ வேண்டிய நிலைமையே நீடிக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

Latest Offers