வளத்தை பாதுகாக்க கோரி வனத்தில் ஆர்ப்பாட்டம்

Report Print Suman Suman in சமூகம்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று(05) முல்லைத்தீவு புத்துவெட்டுவான் மற்றும் கொக்காவில் காட்டுப் பிரதேசத்தில் கண்டன கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார்,

இயற்கையே மனிதர்களின் உயரிய வளம். அந்த இயற்கையை அழித்து விட்டு மனிதர்களால் எப்படிப் பாதுகாப்பாக வாழ முடியும்? இந்தப் பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும்தான் உயிரினங்கள் வாழ முடியும் என்று அறிவியல் சொல்கிறது.

எனவே, அந்த இயற்கையைப் பேணிப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவருடைய பொறுப்பாகும் என்று அதே அறிவியலே கூறுகிறது. ஆனால் இங்கே நடந்து கொண்டிருப்பது என்ன?

நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேணிப்பாதுகாத்த இயற்கை வளங்கள் ஒரு சிறிய குழாத்தினரால் அவர்களுடைய நலனுக்காக அழிக்கப்பட்டும், அபகரிக்கப்பட்டும் வருகிறது.

இதனை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? இன்று உலகெங்கும் பருவம் தவறிய மழையே பெய்கிறது. பருவப் பெயர்ச்சி மழை பொய்த்து விட்டது. வெயிலும் வெக்கையும் கூடியிருக்கிறது.

வெள்ளமும், புயலும், பனியும் வரட்சியும் என்று மோசமான கால நிலைக் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இயற்கையின் சீற்றம் எல்லா இடத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் பேரழிவுகள் ஏற்படுகிறது.

இந்த அழிவு மக்களையே நேரடியாகப் பாதிக்கிறது. இயற்கையின் சீற்றத்தின் முன்னே எவராலும் எதிர்த்து நிற்க முடியாது. இயற்கை சீற்றமடைந்தால் அனைவருக்குமே பாதிப்பே ஏற்படும்.

வன்னிப் பிராந்தியம் காட்டு வளத்தையும் மணல் மற்றும் நீர் வளத்தையும் தாராளமாகப் பெற்றது. ஆனால், இன்று அபிவிருத்திக்கான அகழ்வு என்ற அடிப்படையில் திட்டமிடலின்றி மணலும் கிறவலும் அகழப்பட்டு காடுகள் அழிவடைந்து வருகின்றன. நில அமைப்பே மாறி விட்டது.

இது மிக விரைவில் இந்தப் பிராந்தியத்தை வரண்ட வலையமாக்கி விடும். நீர் வசதியில்லாத அம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களாக மிக விரைவில் வன்னிப் பிராந்தியமும் மாறி விடக் கூடிய அபாயம் நம்முடைய காலடியில் உள்ளது.

எனவே நாம் உடனடியாகவே இந்த தவறான நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்.

Latest Offers