நபர் ஒருவரை வாகனத்தால் அடித்து கொலை செய்த அமைச்சரின் மகன் - கொழும்பு ஊடகம் தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

சமகால அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக செயற்படும் பாலித ரங்கே பண்டாரவின் மகன் குடிபோதையில் வாகனம் ஓட்டியமையினால் நேற்று விபத்து ஏற்பட்டது.

சிலாபம், புத்தளம் வீதியின் பங்கதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த விபத்தில் வீட்டிற்கு பாரிய சேதம் ஏற்பட்ட நிலையில் அமைச்சரின் மகன் காயமடைந்திருந்தார்.

எப்படியிருப்பினும் தங்கள் வீட்டிற்கு ஏற்பட்ட சேதத்திற்கு நட்டஈடு வழங்கும் வரை விபத்துக்குள்ளான கெப் வண்டியை அங்கிருந்து நகர்த்துவதற்கு இடமளிக்கப்போவதில்லை என சேதமடைந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சின் வாகனத்தை ஓட்டி சென்ற போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கெப் வண்டிக்குள் இருந்த வெளிநாட்டு மதுபான போத்தல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அமைச்சரின் மகனால் ஆனமடுவ, இகினிமிட்டிய பிரதேசத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் மீது வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை, அவரால் நடந்த இன்னுமொரு விபத்தில் ஆனமவ பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். அந்த சந்தர்ப்பத்தில் வாகனத்தை நிறுத்தாமல் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இதுவரையில் அமைச்சரின் மகன் கைது செய்யப்படவில்லை எனவும் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொள்வதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.