ஹட்டன் பொலிஸ் நிலைய செயற்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் - டயகம பிரதான வீதியில் போடைஸ் பகுதியில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போடைஸ் தொழிற்சாலை முன்பாக இன்று மதியம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை தோட்ட சேவையாளர்கள் சங்கத்தின் ஹட்டன் கிளை காரியாலய உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஹட்டன் டயகம பிரதான வீதி ஊடான பொது போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு மேல் பாதிப்புக்குள்ளாகின.

ஆர்ப்பாட்டகாரர்கள் பதாதைகளை ஏந்தியவாறு, தாக்கிய நபரை கைது செய்யக் கோரி வீதியை மறித்து கோஷமிட்டனர்.

குறித்த தோட்டத்தில் வெளிக்கள உத்தியோகஸ்த்தர் ஒருவரை அதே தோட்டத்தில் வேலையற்ற ஒருவர் தாக்கியுள்ளதாகவும், அவரை உடனடியாக கைது செய்யாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 04.06.2018 குறித்த தோட்டத்தில் வேலையற்ற நபர் ஒருவர் தோட்ட காணியொன்றினை துப்பரவு செய்த போது அதனை அத்தோட்டத்தில் வேலை செய்யும் வெளிகள உத்தியோகஸ்த்தர் தடுக்க முற்பட்டுள்ளார்.

இதன் போது இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. குறித்த வெளிகள உத்தியோகஸ்த்தர் தாக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் 04.06.2018 அன்று மாலை முறைபாடு செய்துள்ளார்.

இந்த முறைபாடு குறித்து கடந்த மூன்று நாட்களாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கும் இவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

இதன்பின் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தாமதித்தாவது கைது செய்யப்பட்டதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும், இனி பொலிஸார் அசமந்த போக்கில் இருக்க கூடாது என்றும் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்ததோடு, ஆர்ப்பாட்டத்தையும் கைவிட்டனர்.

இது குறித்து பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது,

வீதியில் ஏற்பட்ட முறுகல் நிலையினை தொடர்ந்து இரு சாராரும் பாதிப்புக்குள்ளாகியதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் அவரை கைது செய்யவில்லை.

அவர் வைத்தியசாலையிருந்து வீடு திரும்பிய உடனேயே அவர் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியிருப்பதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்தது.

பொலிஸார் இதன் போது தாமதமோ, எந்த ஒரு சாராருக்கும் சார்பாகவோ இருக்கவில்லை என்றும், மனித அபிமான அடிப்படையில் நடந்து கொண்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு மேலும் தெரிவித்தது.