இலங்கையில் 160 வருட வரலாற்றை மாற்றிய ரயில் குழந்தை!

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயிலில் நேற்று இரவு ஆண் குழந்தை ஒன்று பிரசவிக்கப்பட்டுள்ளது.

160 வருட இலங்கை ரயில் வரலாற்றில் இவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என தெரியவந்துள்ளது.

ஓடும் ரயிலில் பிரசவ வேதனையுடன் பெண் ஒருவர் உள்ளார் என ரயில் பாதுகாப்பு அதிகாரிக்கு அறிந்து கொள்ள முடிந்துள்ளது.

உடனடியாக செயற்பட்ட அதிகாரிகள் ஹபரண பொலிஸாருக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் ஹபரண வைத்தியசாலையின் வைத்தியருக்கும் அறிவித்துள்ளனர்.

பின்னர் உடனடியாக நோய்காவு வண்டி ஒன்றும் பொலிஸ் ஜீப் வண்டி ஒன்றும் அவ்விடத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து ஹபரண ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்துமாறு பொலிஸார் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

ரயில் நிறுத்தப்பட்டவுடன் கர்ப்பிணி தாய்க்கு குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய உடனடியாக செயற்பட்ட சுகாதார அதிகாரிகள் நோய்காவு வண்டி ஊடாக தாயையும் குழந்தையும் வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தாய் இதய நோயினால் பாதிக்கப்பட்டவர் என்பதனால் அவர் மேலதிக சிகிச்சை மேற்கொள்வதற்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார். தற்போது தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதய பிரச்சினை காரணமாக கொழும்பு வைத்தியசாலையில் குழந்தை பிரசவிக்குமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியிருந்தனர். எனினும் அதனை மீறி இந்த பெண் தனது கணவருடன் மட்டக்களப்புக்கு பயணித்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.