ஆடி மாத மடு திருவிழாவுக்கான ஆரம்ப பணிகள் தொடர்பான விசேட கூட்டம்

Report Print Ashik in சமூகம்

மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள மடு திருத்தல ஆடி மாத திருவிழாவுக்கு சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், அதற்கான முழுமையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி அன்ரனி விக்ரர் சோசை அடிகளார் தெரிவித்தார்.

ஆடி மாத மடுத்திருவிழாவை முன்னிட்டு இன்று காலை மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் முகமாக சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.

இதன் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி அன்ரனி விக்ரர் சோசை அடிகளார், மடு திருப்பதி பரிபாலகர் அருட்பணி எஸ்.எமிலியானுஸ்பிள்ளை அடிகளார், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.ஆர்.குணவர்த்தன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது போக்குவரத்து, பாதுகாப்பு, ரயில் விஷேட சேவை, சுகாதாரம், மின்சாரம், நீர், உணவு போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

சந்திப்பு குறித்து மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உரையாற்றுகையில்,

இந்த ஆண்டு ஆடி மாத மடு தேவாலய உற்சவத்தை முன்னிட்டு யாத்திகர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் முகமாக சகல திணைக்கள அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கும் முகமாக மன்னார் மாவட்ட செயலகம் இன்று ஏற்பாடு செய்திருப்பதையிட்டு மன்னார் மறைமாவட்ட ஆயர் மற்றும் மடு பரிபாலகர் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

இந்த ஆண்டும் வழமைபோன்று மடு தேவாலய ஆடி மாத விழாவுக்கு மூன்று இலட்சம் பக்தர்கள் வருவார்கள் என நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

திருவிழாவானது இம் மாதம் 23ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆடி மாதம் 02ம் திகதி திருவிழாவுடன் நிறைவு பெற இருக்கின்றது.

இந்த பத்து தினங்களுக்கும் பலர் மடு ஆலயத்திற்கு வந்து, முகாமிட்டு நவநாட்களிலும் திருவிழாவிலும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு முழுமையான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மேலும் தெரிவித்தார்.