அரச பணியாளர் போன்று நடித்து ஏமாற்ற முற்பட்டவர் சிக்கினார்

Report Print Rakesh in சமூகம்

யாழ்ப்பாண மாவட்டச் செயலக பணியாளர் போன்று நடித்து, பெண் ஒருவரை ஏமாற்ற முற்பட்ட ஆசாமி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக வளாகத்தினுள், மாவட்டச் செயலக பணியாளர் போன்று நடித்து, பெண்ணுக்கு உதவுவதாகத் தெரிவித்து கிளிநொச்சிக்கு வருமாறு அழைத்துள்ளார்.

இது தொடர்பில் சந்தேகமடைந்த பெண், தனது சகோதரி ஊடாக மாவட்டச் செயலகப் பணியாளர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.

பணியாளர்கள் மாவட்டச் செயலரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். மாவட்டச் செயலர் நா.வேதநாயகன், உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

அந்த ஆசாமியை மடக்க பொலிஸார் திட்டமிட்டனர். இதற்காகப் பொலிஸ் குழு அமைக்கப்பட்டது.

மாவட்டச் செயலகத்தின் மறைகாணியில் (சி.சி.ரி.வி) பெறப்பட்ட ஆசாமியின் படம் பொலிஸ் குழுவுக்கு வழங்கப்பட்டது.

அந்தப் பெண்ணுக்கும் பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கி, ஆசாமியுடன் தொடர்புகொள்ளப் பணித்துள்ளனர். கிளிநொச்சிக்கு வரச் சம்மதம் என்று பெண் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு வந்து தன்னை அழைத்துச் செல்லுமாறு அலைபேசியில் கூறியுள்ளார். பெண்ணின் பேச்சை நம்பி ஆசாமி பஸ் நிலையத்துக்கு நேற்று மதியம் வந்துள்ளார்.

அந்தப் பகுதியில் சிவில் உடையில் களமிறக்கப்பட்டிருந்த பொலிஸார் ஆசாமியை மடக்கிப் பிடித்தனர். அவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.