யாழ் நீரியல்வளத் திணைக்களம் நாளை முற்றாக முடக்கப்படும்!

Report Print Rakesh in சமூகம்

வடமராட்சி கிழக்கில் வெளிமாவட்டங்களிலிருந்து வந்து தங்கி நின்று கடலட்டை பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களை வெளியேற்றுவதற்கு ஆக்கபூர்வமான எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் பக்கச் சார்பாகச் செயற்படுகின்றனர்.

மீனவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு கோரி, யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தை நாளை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு முடக்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கில் வெளிமாவட்ட மீனவர்கள் வாடி அமைத்து கடலட்டை பிடித்து வருகின்றனர். கடலட்டை பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்படும்போது விதிக்கப்பட்ட நிபந்தனையை மீறிச் செயற்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும், அந்த மீனவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றவேண்டும் என்றும் கோரி, கவனயீர்ப்புப் போராட்டம் நேற்றுப் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் முடிவில், மருதங்கேணி பிரதேச கடற்தொழில் சமாசத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில், இளைஞர்கள் கொந்தளித்தனர். வெளிமாவட்ட மீனவர்களின் வாடிகள் உடனடியாக அகற்றப்படவேண்டும். அவர்களுக்கு கால அவகாசம் எல்லாம் இனி வழங்க முடியாது.

அவர்கள் வெளியேற்றப்படாவிட்டால், வாடிகளை தீ வைத்து எரிக்கவேண்டிய நிலமை ஏற்படும் என்று இளைஞர்கள் தெரிவித்தனர்.

இந்த விடயத்தில் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்பதால், நாளை வெள்ளிக் கிழமை யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியிலுள்ள கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தோர் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.