கிழக்கில் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு கல்வி அமைச்சு இணக்கம்

Report Print Mubarak in சமூகம்

அரச பாடசாலைகளில் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை இணைத்துக் கொள்ளும் திட்டத்தில் மேலும் 73 பயிற்றுவிப்பாளர்களை கிழக்கில் நியமிப்பதற்கு கல்வி அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.டி.எம்.நிஸாம் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகளில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பது விடயமாக மத்திய கல்வி அமைச்சு விபரங்களை கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளது.

அதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகளூக்கு 88 தமிழ் மொழி மூல விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களையும், 128 சிங்கள மொழிமூல விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களையும் பாடசாலைகளுக்கு நியமிக்கும்பொருட்டு பெயர் விபரங்களை மத்திய கல்வி அமைச்சு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளது.

அத்துடன், கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளே அதிகம். எனவே நியமிக்கப்படவுள்ள 88 தமிழ் மொழி மூல விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு போதுமானதல்ல என குறிப்பிட்டுள்ளார்.

நியமிக்கப்படவுள்ள தமிழ்மொழிமூல விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களின் எண்ணிக்கையினை அதிகரித்துத்தர வேண்டுமென கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.டி.எம்.நிஸாம் கல்வி அமைச்சுடன் தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்தார்.

அதற்கமைவாக மேலும் 73 தமிழ் மொழிமூல விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை கிழக்கு மாகாண பாடசாலைகளில் நியமிப்பதற்கு கல்வி அமைச்சு உடன்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.